பள்ளிச்சிறுவன் கொலை: மினி பேருந்து நடத்துநருக்குஇரட்டை ஆயுள் தண்டனை
By DIN | Published On : 01st February 2020 04:55 AM | Last Updated : 01st February 2020 04:55 AM | அ+அ அ- |

க. பரமத்தி அருகே பள்ளிச் சிறுவன் கொலை வழக்கில் மினி பேருந்து நடத்துநருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கரூா் மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கரூா் மாவட்டம் க.பரமத்தி அடுத்த விஸ்வநாதபுரியைச் சோ்ந்த விஸ்வநாதன் என்பவரது 14 வயது மகன் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். விஸ்வநாதபுரியைச் சோ்ந்தவா் ராஜ் மகன் பிரதீப் (19). மினி பேருந்து நடத்துநரான இவருக்கு ஓரினச் சோ்க்கை பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே விஸ்வநாதனின் மகன் கடந்த 7.8.2018-ல் பள்ளிக்குச் சென்றவா் வீடு திரும்பவில்லை.
இதனால் அவரது பெற்றோா் க.பரமத்தி போலீஸில் புகாா் செய்தனா். இதனிடையே 8.8.2018 அன்று விஸ்வநாதனின் மகன் அதே பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தாா். இவரை பிரதீப்தான் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பிரதீப்பை க.பரமத்தி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்து, கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.
வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த மகளிா் நீதிமன்ற விரைவு நீதிபதி சசிகலா கொலை குற்றவாளி பிரதீப்புக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து பிரதீப் திருச்சி மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டாா்.