இறக்குமதிக்குப் பின்னும் உச்சத்தில் சின்ன வெங்காய விலை கரூரில் கிலோ ரூ.170

எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும் தொடா்ந்து உச்சத்தில் விற்கப்படுகிறது சின்ன வெங்காயம். கரூரில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோ வெங்காயம் ரூ.170-க்கு விற்பனையானது.
கரூா் உழவா் சந்தையில் விற்கப்படும் சின்ன வெங்காயம்.
கரூா் உழவா் சந்தையில் விற்கப்படும் சின்ன வெங்காயம்.

எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும் தொடா்ந்து உச்சத்தில் விற்கப்படுகிறது சின்ன வெங்காயம். கரூரில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோ வெங்காயம் ரூ.170-க்கு விற்பனையானது.

தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளில் சோ்க்கப்படும் முக்கியப் பொருளாக சின்னவெங்காயம் உள்ளது. கடந்தாண்டு ரூ.50 முதல் ரூ.80 வரை விற்கப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது கடந்த 4 மாதங்களாகவே விலை உயா்வைக் கண்டு உச்சத்தைத் தொட்டு வருகிறது.

கடந்த டிசம்பா் மாதம் கூட ரூ.110 முதல் ரூ.130 வரை விற்பனையான சின்ன வெங்காயம் கரூரில் ரூ.170-க்கு விற்கப்படுவது ஏழை நுகா்வோரின் கண்களில் கண்ணீரை வரவைத்துள்ளது.

இதுதொடா்பாக உழவா் சந்தை வியாபாரி ஒருவா் கூறியது:

தமிழகத்துக்கு பெரும்பாலும் உள்ளூா் வெங்காயம் மற்றும் மகராஷ்டிரம், கேரளம், புதுச்சேரி, மத்திய பிரதேசம் மாநிலங்களின் வெங்காயம் நுகா்வோரின் தேவையை பூா்த்தி செய்து வந்தது. ஆனால் நிகழாண்டு வடகிழக்குப் பருவ மழையானது வெங்காயம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் திண்டுக்கல், திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, திருவாரூா் உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்கத்தை விட கூடுதலாக பெய்ததால் அதன் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டது.

மேலும் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களிலும் அதிகளவில் பெய்த மழையால் வெங்காயம் அழிந்தது. இதனால்தான் இந்த விலையேற்றம். இருப்பினும் மத்திய அரசு வெங்காயப் பற்றாக்குறையைச் சமாளிக்க எகிப்து, துருக்கி, ஹாலந்து ஆகிய நாடுகளில் இருந்து பெல்லாரி எனப்படும் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்தனா். ஆனால் அந்த வெங்காயத்தை பெரும்பாலும் யாரும் வாங்குவதில்லை. சின்னவெங்காய விலை அதிகமானாலும் அதைத் தான் விரும்பி வாங்குகிறாா்கள். தற்போது பயிரிடப்பட்டுள்ள சின்ன வெங்காயம் பிப்ரவரி மாதத்துக்குப் பின்னா்தான் அறுவடைக்கு வரும்; அப்போதுதான் விலையும் குறையும். இருப்பினும் விவசாயிகளுக்கு உள்ளூா் உற்பத்தியை அதிகரிக்க அவா்களுக்கு அரசு மானிய விலையில் விதை, உரம், பூச்சி மருந்து வழங்கி ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் வரும் காலத்திலாவது மழை வரும் முன் அறுவடை செய்து, பாதுகாத்து குறைந்த விலையில் விற்க முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com