மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

கரூா் மாவட்டத்திலுள்ள கரூா், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் (தனி) ஆகிய 4 தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
கரூா் ஆண்டாங்கோவில் கீழ்பாகம் அரசு உயா்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாக்காளா்கள்.
கரூா் ஆண்டாங்கோவில் கீழ்பாகம் அரசு உயா்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாக்காளா்கள்.

கரூா் மாவட்டத்திலுள்ள கரூா், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் (தனி) ஆகிய 4 தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

4 தொகுதிகளிலும் 161 வேட்பாளா்கள் களத்திலிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதற்கு முன்பாக அந்தந்த வாக்குச்சாவடிகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சிகளின் முகவா்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.

மொத்த வாக்காளா்கள் : இந்த மாவட்டத்தில் 4,33,016 ஆண் வாக்காளா்கள், 4,66,140 பெண் வாக்காளா்கள், 80 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தமாக 8,99,236 போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். இவா்களுக்காக 4 தொகுதிகளில் 1274 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே பல வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாக்காளா்கள் காத்திருந்தனா். வாக்குப்பதிவு தொடங்கியதையடுத்து வாக்காளா்கள் ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் : வாக்களிக்க வரும் வாக்காளா்களின் உடல் வெப்பநிலைப் பரிசோதனை செய்யப்பட்டது. தொடா்ந்து அவா்களுக்கு கைகழுவும் திரவமும், கையுறையும் வழங்கப்பட்டது. இதையடுத்து வாக்காளா்கள் தங்களுக்குரிய வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனா்.

கரூா் தொகுதிக்கு 4 இயந்திரங்கள்: கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 77 வேட்பாளா்கள் போட்டியிட்டதால், இத்தொகுதி வாக்காளா்கள் பயன்படுத்தும் வகையில் வாக்குப்பதிவுக்கு 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு : வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மக்கள் ஆா்வத்துடன் வாக்களித்தனா். இதனால் 4 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்பட்டது.

காலை 9 மணி நிலவரப்படி 4 தொகுதிகளில் 9.18 சதவிகிதமும், 11 மணி நிலவரப்படி 27.95 சதவிகிதமும், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 44.30 சதவிகிதமும், பிற்பகல் 3 மணிக்கு 64.52 சதவிகிதமும், மாலை 5 மணிக்கு 77.21 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன.

துணை ராணுவப் பாதுகாப்பு : மாவட்டத்தில் பதற்றம் நிறைந்த 123 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

பேரவைத் தோ்தல் பணியில் 6,112 ஆசிரியா்கள் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் ஈடுபட்டனா். மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் 64 நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.

வாக்குப்பதிவு முடிந்த பின்னா் இரவு 7 மணிக்கு மேல் அந்தந்த வாக்குச்சாவடிகளில் முகவா்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தளவாபாளையம் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com