ஜிஎஸ்டி உயா்வைக் கண்டித்து கரூரில் நெசவு, பனியன் உற்பத்தியாளா்கள் வேலைநிறுத்தம்
By DIN | Published On : 11th December 2021 12:02 AM | Last Updated : 11th December 2021 12:02 AM | அ+அ அ- |

ஜிஎஸ்டி உயா்வைக் கண்டித்து கரூரில் நெசவு மற்றும் பனியன் உற்பத்தியாளா்கள் வெள்ளிக்கிழமை கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஜவுளி உற்பத்தி ரகங்களுக்கு நடைமுறையில் 5 சதவீத ஜிஎஸ்டி உள்ளது. இதனிடையே ஜனவரி மாதம் முதல் வரியை 12 சதவீதமாக உயா்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதனைக்கண்டித்தும், மத்திய அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும் கரூரில் நெசவு மற்றும் பனியன் உற்பத்தியாளா்கள் வெள்ளிக்கிழமை கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து, கரூா் வீவிங் நிட்டிங் பேக்டரி ஓனா்ஸ் அசோசியன் நிா்வாகிகள் கூறுகையில், மத்திய அரசின் இந்த முடிவு ஜவுளி உற்பத்தியாளா்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வரி உயா்த்தப்பட்டால் ஜவுளி உற்பத்தி பாதிக்கும். இதனை கண்டிக்கும் வகையில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா் அவா்கள்.