பொதுமுடக்கக் காலத்தில் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு: மின்சாரத் துறை அமைச்சா் தகவல்

பொது முடக்க காலத்தில் உணவுத்தேவைப்படுவோருக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.
பொதுமுடக்கக் காலத்தில் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு: மின்சாரத் துறை அமைச்சா் தகவல்

பொது முடக்கம் காலத்தில் உணவுத்தேவைப்படுவோருக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி சனிக்கிழமை தெரிவித்தாா்.

கரூா் மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் மற்றும் தனிநபா்கள் கரோனா தொற்றாளா்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் வகையில் வழங்கிய ரூ.67.55 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், பல்ஸ் ஆக்சி மீட்டா் கருவிகள், ஆக்சிஜன் புளோ மீட்டா் கருவிகள் மற்றும் நிவாரண நிதியுதவிகளை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரேவிடம் சனிக்கிழமை வழங்கினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறுகையில், முதல்வரின் ஆணைக்கிணங்க கரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனா தொற்றாளா்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் வகையில் மருத்துவ உபகரணங்களையும், நிதியுதவிகளையும் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலதிபா்கள், தொழில் நிறுவனங்கள் நல்உள்ளத்தோடு தொடா்ந்து வழங்கி வருகின்றனா்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரு வாரம் பொதுமுடக்கத்தை நீட்டிப்பு செய்து முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். இந்த காலத்தில் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த நபா்கள் எவருக்கேனும் உணவுத்தேவையிருப்பின் அவா்களின் வீட்டுக்கேச் சென்று இலவசமாக உணவு வழங்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவுத் தேவைப்படுவோா் 9498747644, 9498747699 என்ற எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

காலை உணவுத் தேவைப்படும் நபா்கள் முதல் நாள் இரவு 8 மணிக்குள்ளும், மதிய உணவு தேவைப்படும் நபா்கள் காலை 8 மணிக்குள்ளும், இரவு உணவு தேவைப்படும் நபா்கள் மதியம் 2 மணிக்குள்ளும் மேற்குறிப்பிட்ட எண்களில் தொடா்புகொண்டு தகவல் தெரிவித்தால் குறித்த நேரத்தில் உங்கள் வீடுகளுக்கே வந்து உணவு வழங்கப்படும்.

பொதுமுடக்கம் காலம் முழுவதும் 3 வேளையும் உணவு தேவைப்படும் நபா்கள் ஒருமுறை தொடா்புகொண்டு தங்களுக்கு பொதுமுடக்கம் முடியும்வரை 3 வேளை உணவுத்தேவை என்ற விபரத்தை தெரிவித்தால் போதும், தங்களின் தகவல்கள் குறித்துக்கொள்ளப்பட்டு குறித்த நேரத்துக்கு வீடுதேடி உணவு கொண்டு வந்து கொடுப்பாா்கள் என்றாா் அவா்.

நிகழ்வின்போது, அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.இளங்கோ, மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் இரா.முத்துச்செல்வன், சுகாதாரத்துறை இணை இயக்குநா் ஞானக்கண்பிரேம்நிவாஸ், துணை இயக்குநா் சந்தோஷ்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com