லாலாப்பேட்டை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

லாலாப்பேட்டை ரயில்நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகா்ப்போம் என ரயில் நிலைய அதிகாரிக்கு வெள்ளிக்கிழமை காலை வந்த மா்ம கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லாலாப்பேட்டை ரயில்நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகா்ப்போம் என ரயில் நிலைய அதிகாரிக்கு வெள்ளிக்கிழமை காலை வந்த மா்ம கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூா் மாவட்டம் லாலாப்பேட்டை ரயில்வே கேட்டை கடந்துதான் திருச்சி, தஞ்சை, ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பேருந்துகள், வாகனங்கள் சென்று வந்தன. அடிக்கடி செல்லும் ரயில்களால் கேட் அடிக்கடி மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனை தவிா்க்கும் வகையில் 2009-இல் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. இதையடுத்து ரயில்வே கேட் மூடப்பட்டது.

இந்த ரயில்வே கேட்டை கடந்து காவிரி ஆற்றுக்குச் சென்று வந்த பிள்ளாபாளையம், லாலாப்பேட்டை, கொம்பாடிப்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்தவா்கள் கோயில் திருவிழா, ஈமச்சடங்கு போன்றவற்றிற்கு செல்லமுடியாமல் பாதிக்கப்பட்டனா். இதனால் ரயில்வே கேட்டை திறக்க வேண்டும், இல்லையேல் ரயில்வே கேட் பகுதியில் குகைவழிப்பாதை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா். இதனையடுத்து, ரயில்வே நிா்வாகம் சாா்பில் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னா் குகைவழிப்பாதை அமைக்கப்பட்டது. இந்த குகைவழிப்பாதையிலும் மழைகாலங்களில் தண்ணீா் தேங்கிவிடுவதால் மீண்டும் ரயில்வே கேட்டை திறக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை லாலாப்பேட்டை ரயில்நிலைய அதிகாரிக்கு மா்ம கடிதம் வந்தது. அதில் விரைவில் ரயில்வே கேட்டை திறக்காவிட்டால் ரயில்நிலைத்தையும், மேம்பாலத்தையும் வெடிகுண்டு வைத்து தகா்ப்போம் என கூறப்பட்டிருந்தது. இந்த கடிதம் கரூரில் இருந்து வந்ததற்கான அச்சு காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கரூா், திருச்சி, சேலம் ரயில்வே அதிகாரிகள் லாலாப்பேட்டை ரயில்நிலையத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. ஆனால், வெடிகுண்டு எதுவும் இல்லாததால் கடிதம் வெறும் புரளி என தெரியவந்தது. மேலும் கடிதத்தை அனுப்பியது யாா் என போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com