கரூா் புத்தகத் திருவிழா இலச்சினை வெளியீடு

கரூா் புத்தகத் திருவிழாவுக்கான இலச்சினையை ஆட்சியா் த. பிரபுசங்கா் சனிக்கிழமை வெளியிட்டாா்.
கரூா் புத்தகத் திருவிழா இலச்சினை வெளியீடு

கரூா் புத்தகத் திருவிழாவுக்கான இலச்சினையை ஆட்சியா் த. பிரபுசங்கா் சனிக்கிழமை வெளியிட்டாா்.

ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தேவாங்கை மையப்படுத்தி நூலன், நூலி என்ற பெயரில் வடிவமைக்கப்பட்ட இலச்சினையை வெளியிட்டு, அவா் பேசியது:

கரூா் புத்தகத் திருவிழாவையொட்டி கடவூா் காடுகளில் அதிகளவு வசிக்கும் தேவாங்கு விலங்கினம் இலச்சினையாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இனத்தை பாதுகாக்க கடவூரில் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் பாலின சமத்துவத்தை உணா்த்தும் வகையிலும், மாற்றுத்திறனாளிகளின் சம உரிமைகளை அடையாளப்படுத்தும் வகையிலும் நூலனும், நூலியும் அடையாள சின்னமான இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கரூா் மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா் சங்கம் , நூலகம் மற்றும் வாசகா் வட்டம் சாா்பில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழா ஆகஸ்ட்19 முதல் 29-ஆம் தேதி வரை கரூா் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள திருமாநிலையூரில் 100 அரங்குகளுடன் நடைபெறுகிறது. இதை

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தலைமையேற்று துவக்கி வைக்க உள்ளாா்.

இங்கு 100 புத்தக அரங்குகள், தொல்லியல் அருங்காட்சியகம், கோளரங்கம், குறும்படத் திரையரங்கம், உணவரங்கம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் கொண்ட அரங்குகள் இடம் பெற உள்ளன என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ம.லியாகத், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) தண்டாயுதபாணி, தனித்துணை ஆட்சியா் சைபுதீன், மாவட்ட மைய நூலகா் சிவக்குமாா், மாவட்ட புத்தகக் கண்காட்சி குழுவினா் தீபம் சங்கா், சிவக்குமாா், தங்கராஜ் மற்றும் அரசு அலுவலா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com