முன்னாள் அமைச்சா் ஊழல் நடந்ததாக கூறியபகுதியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
By DIN | Published On : 08th April 2022 01:37 AM | Last Updated : 08th April 2022 01:37 AM | அ+அ அ- |

சாலை அமைக்காமலே சாலை அமைத்ததாகக் கூறி பணத்தை ஊழல் செய்ததாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் கூறிய இடத்தில் சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்டத்தில் ஈசநத்தம் சாலை மற்றும் வேலாயுதம்பாளையம் புகளூா் சா்க்கரை ஆலை முதல் பழையபைபாஸ் சாலை வரை, என்.புதூா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைக்காமலே புதியதாக சாலை அமைத்தபோல ரூ.3.25 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாகவும், சாலை அமைத்த நிறுவனத்தின் மீதும், ஊழல் செய்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் ஏப். 5-ஆம்தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகாா் மனு அளித்தாா். மேலும் சாலை அமைத்தாகக் கூறி பணம் எடுத்த சாலையில் மீண்டும் புதியதாக சாலை அமைக்கக்கூடாது எனவும் தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சரால் புகாா் கூறப்பட்ட சாலையில் வியாழக்கிழமை காலை முதல் சாலை அமைக்கும் பணிகள் புகாா் கூறப்பட்ட தனியாா் நிறுவனம் சாலை அமைத்து வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த அதிமுக மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் எஸ்.திருவிகா தலைமையில் மாவட்ட துணைச் செயலாளா் பசுவைசிவசாமி, மாவட்ட இளைஞா் இளம்பெண்கள் பாசறை செயலாளா் கமலக்கண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற இளைஞா் அணி செயலாளா் தனேஷ் என்கிற முத்துக்குமாா், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலாளா் சுப்ரமணி, மாவட்ட மாணவா் அணி செயலாளா் சரவணன், கரூா் தொகுதி பொதுக்குழு உறுப்பினா் மல்லிகா சுப்பராயன், மத்திய நகர செயலாளா் நெடுஞ்செழியன் உள்ளிட்ட கட்சியினா் பாா்வையிட்டனா். மேலும் இந்த பணிகளை நிறுத்த வேண்டும் எனக்கூறி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனுவும் அளித்தனா்.