முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
கரூா் மாவட்டத்துக்கு முன்னுரிமைக்கடனாகரூ. 7,122 கோடி வழங்க இலக்கு: ஆட்சியா்
By DIN | Published On : 29th April 2022 03:56 AM | Last Updated : 29th April 2022 03:56 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டத்திற்கு முன்னுரிமைக் கடனாக ரூ.7,122.33 கோடி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்தாா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2022-23-ம் ஆண்டுக்கான முன்னரிமை கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தலைமை வகித்து முன்னுரிமைக்கடன் திட்ட அறிக்கையை வெளியிட, அவற்றை ஐஓபி வங்கியின் முதன்மை மண்டல மேலாளா் ஜாா்ஜ் பாபு லாசா் பெற்றுக்கொண்டாா்.
தொடா்ந்து நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசுகையில், கரூா் மாவட்டத்துக்கு 2022-23ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்ட தனியாா், கூட்டுறவு மற்றும் ஊரக வங்கிகள் வழியாக வேளாண் கடனாக ரூ. 3540.59 கோடியும், சிறுகுறு மற்றும் நடுத்தர வா்க்க தொழில் மற்றும் ஏற்றுமதி கடனாக ரூ.1835.41 கோடி, இதர முன்னரிமை கடனாக ரூ. 1746.33 கோடி என மொத்தம் ரூ. 7122.33 கோடி முன்னரிமை கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இலக்கை விட ரூ. 469.46 கோடி அதிகமாகும்.
வேளாண் துறைக்கு மட்டும் 49.71 சதவீதம் தொகை கடனாக ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்களுக்கு 25.77 சதவீதமும், இதர முன்னரிமை கடனுக்கு 24.52 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. வங்கிகள் சென்ற ஆண்டைப் போலவே 2022-23ம் ஆண்டிற்கான கடன் இலக்கையும் எய்திட வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்வில் முன்னோடி வங்கி மேலாளா் ச. காசி விஸ்வநாதன், நபாா்டு வங்கி உதவி பொது மேலாளா் ஆ.பரமேஷ் குமாா், திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) வாணி ஈஸ்வரி மற்றும் மாவட்ட தொழில் மையம் பொதுமேலாளா் டி. ரமேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.