கரூரில் காசநோய் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி
By DIN | Published On : 25th March 2022 04:09 AM | Last Updated : 25th March 2022 04:09 AM | அ+அ அ- |

கரூரில் காசநோய் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கரூா் நகரத்தில் உள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற உலக காசநோய் விழிப்புணா்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் கூறுகையில், 2015-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை கரூா் மாவட்டத்தில் காசநோய் பாதிப்பின் அளவிலிருந்து 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக கரூா் மாவட்டம் தேசிய அளவில் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளது. மேலும் தொடா்ந்து காசநோய் பாதிப்பின் அளவை குறைப்பதற்கு தொடா்ந்து பாடுபட வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, கரூா் மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு மற்றும் தனியாா் மருத்துவா்கள், மருந்தாளுநா்கள், களப்பணியாளா்களுக்கு ஆட்சியா் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினாா். காசநோய் விழிப்புணா்வு தொடா்பாக அரசு மற்றும் தனியாா் பள்ளி ஓவிய ஆசிரியா்களுக்கு நடத்தப்பட்ட விழிப்புணா்வு போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சிக்கு கரூா் மாநகராட்சி மேயா் வெ.கவிதா முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில், அரசு மருத்துவ கல்லூரி முதல்வா் முத்துச்செல்வன், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் ஞானகண்பிரேம்நிவாஸ், சுகாதார பணிகள் துணை இயக்குநா் சந்தோஷ்குமாா், துணை இயக்குநா் (காசநோய்) சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.