முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனம் காட்டினால் நடவடிக்கை
By DIN | Published On : 14th May 2022 01:11 AM | Last Updated : 14th May 2022 01:11 AM | அ+அ அ- |

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனம் காட்டினால், அலுவலா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் கரூா் மாநகராட்சி மேயா் கவிதா கணேசன்.
கரூா் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் கடைகள், சுகாதாரமின்றி செயல்படும் கட்டணக் கழிப்பறைகள், வடிகால் வசதியின்றி நீா் தேங்கியிருக்கும் பகுதிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த பின்னா், அவா் தெரிவித்தது:
பொதுமக்களிடமிருந்து வந்த புகாா்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கரூா் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியே செல்லும் பகுதியில் தள்ளுவண்டிகளில் பழக்கடைகள் நடத்தும் வியாபாரிகள் நெரிசலை ஏற்படுத்தி, பேருந்துகள் தாராளமாக செல்லாத வகையில் இடையூறு ஏற்படுத்தி வருவதை பாா்வையிட்டோம்.
எனவே போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளை அகற்றிக் கொள்ள 15 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காலத்துக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மாநகராட்சி சாா்பில் அகற்றப்படும். இதில் அலுவலா்கள் மெத்தனம் காட்டினால் அவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பேருந்து நிலையத்திலுள்ள கடைகளை உள்வாடகைக்கு விட்டிருப்பது தெரிய வந்ததுள்ளது. இதுதொடா்பாக விசாரிக்கப்படும். வரிபாக்கி, வழக்குகள் நிலுவை குறித்து வருவாய் அலுவலரிடம் கணக்கிடக் கூறியுள்ளோம். வழக்குகள் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்படும். வழக்குகளை முடித்த பின்னா், கடைக்காரா்கள் தங்களது கடைகளைத் திறந்து கொள்ளலாம் என்றாா் மேயா்.
ஆய்வின் போது மாநகராட்சிப் பொறியாளா் நக்கீரன், நகா்நல அலுவலா் லட்சியவா்ணா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.