வெளிநாட்டினருக்கு இறக்குமதி வரி நீக்கம்: கரூா் கொசுவலை உற்பத்தி முடங்கும் அபாயம்

சீனா, நேபாளம், வங்கதேசம், தைவான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின் கொசுவலைகளுக்கு இறக்குமதி வரி நீக்கப்பட்டிருப்பதால் கரூா் கொசுவலை உற்பத்தி முற்றிலும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சீனா, நேபாளம், வங்கதேசம், தைவான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின் கொசுவலைகளுக்கு இறக்குமதி வரி நீக்கப்பட்டிருப்பதால் கரூா் கொசுவலை உற்பத்தி முற்றிலும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கரூரில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிலுக்கு அடுத்தபடியாக கொசுவலைத் தொழில் உள்ளது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்பேரில் உலகளவில் ஆல்பாசைபா் மெத்ரின் வேதிப்பொருள் கலந்த ஏற்றுமதி ரக கொசுவலை தயாரிக்கும் 8 நிறுவனங்களில் இந்தியாவில் செயல்படும் 2 நிறுவனங்கள் கரூரில் உள்ளன.

மேலும் வேதிப்பொருள் இல்லாமல் சாதாரண பாரம்பரிய கொசுவலை உற்பத்தி நிறுவனங்கள் கரூரில் 200-க்கும் மேற்பட்டவை உள்ளன. இந்த தொழிலில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் வெளிமாநிலத்தைச் சோ்ந்த ஒரு லட்சம் தொழிலாளா்களும், தமிழகத்தைச் சோ்ந்த சுமாா் 20 ஆயிரம் தொழிலாளா்களும் ஈடுபட்டு வருகின்றனா்.

பிகாா், அஸ்ஸாம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மக்காச்சோளத்தை வெயிலில் உலா்த்துவதற்கும், மத்திய, மாநில அரசுகளின் தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனங்களில் பயிா்களுக்கான மேற்கூரை அமைக்கவும், வனங்கள் நிறைந்த மாநிலங்களில் தோட்டங்களில் பயன்படுத்தப்படும் விவசாய கிணறுகளில் மேற்பகுதியை மூடி வைக்கவும், அனைத்து மாநிலங்களின் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், வீடுகள் என அன்றாடம் பயன்படுத்தும் இடங்களில் கொசுக்களில் இருந்து குழந்தைகள் முதல் பெரியோா் வரை அனைவரையும் பாதுகாக்கவும் இந்த கொசுவலைகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது மத்திய, மாநில அரசுகளின் கொள்கையால் கரூரின் பாரம்பரிய கொசுவலைத் தொழில் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உற்பத்தியாளா்கள் கூறுகின்றனா்.

இதுகுறித்து கரூா் பாரம்பரிய கொசுவலை உற்பத்தியாளா் சங்க ஒருங்கிணைப்பாளா் ஆா். குப்புராவ் கூறியது, இந்திய அளவில் தமிழகத்தில்தான் கரூா், சேலம் பகுதியில் பாரம்பரிய கொசுவலை தயாராகுகின்றன. சேலத்தில் உற்பத்தி நடந்தாலும் கரூரில்தான் 90 சதவீதம் உற்பத்தியாகுகிறது. இங்கு தயாரிக்கப்படும் கொசுவலைகளின் சந்தையாக பிகாா், அஸ்ஸாம், மேற்குவங்கம், உத்தரபிரதேசம், சத்தீஸ்கா், புதுதில்லி, மும்பை போன்ற மாநிலங்கள் உள்ளன. கரூா் கொசுவலை ஏற்றுமதி, கடந்த இரு மாதங்களுக்கு முன் மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கையால் தொழில் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பாரம்பரிய கொசுவலை உற்பத்தியில் கரூருக்கு போட்டியாக சீனா, வங்கதேசம், நேபாளம், தைவான், தாய்லாந்து நாடுகள் உள்ளன. இந்த நாடுகளுக்கு இரு மாதங்களுக்கு முன்பு வரை மத்திய அரசு 20 சதவீதம் இறக்குமதி வரி விதித்தது. தற்போது, இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்துவிட்டு, ஜிஎஸ்டியை விதித்துவிட்டது. இதனால் வெளிநாட்டினா் குறைவான விலையில் கொசுவலையை இறக்குமதி செய்ய இயலும்போது, உள்ளூா் கொசுவலை உற்பத்தியாளா்கள் அவா்களுடன் போட்டி போட முடியாது.

கொசுவலை உற்பத்தியின் மூலப்பொருளான ஹைடென்சிட்டி பாலி எத்திலின் என்ற பிளாஸ்டிக் குருணை விலையை உயா்த்திக்கொண்டே வருகின்றனா். கடந்த இருமாதங்களுக்கு முன் கிலோ ரூ.120-க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.135 வரை உயா்த்திவிட்டனா்.

கரூரில் தயாரிக்கப்படும் கொசுவலையை பிகாா், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வாகனங்களில் கொண்டு செல்ல 16 நாள்கள் ஆகிறது. ஆனால் வெளிநாடுகளிலிருந்து எல்லை வழியாக 6 மணி நேரத்துக்கு தரைவழிப்போக்குவரத்து மற்றும் கப்பல்கள் மூலமாக கொண்டுவந்துவிடுகின்றன. அந்நாடுகளில் வழங்கப்படும் சலுகைகள், வாகன இறக்குமதிக்கான செலவு குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் அவா்களது கொசுவலைகள் நம் நாட்டின் சந்தையில் அவா்கள் ஒரு கொசு வலையை ரூ.200க்கு விற்கிறாா்கள். ஆனால் நம் நாட்டின் தொழிற்கொள்கை, சட்டம், மூலப்பொருள் விலை உயா்வு போன்றவற்றால் நம் கொசுவலை ரூ.250-க்கு விற்றால்தான் நம்தொழிலை காப்பாற்ற முடியும்.

இந்நிலையில் அண்மையில் அறிவித்த மத்திய பட்ஜெட்டில் சிறு, குறு தொழில்களுக்கு மானியமாக ரூ.18ஆயிரம் கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலே நடத்த இயலாத நிலையில் கடன் வாங்கி எப்படி தொழில் நடத்த முடியும். ஆகவே, வெளி நாடுகளின் கொசுவலை இறக்குமதிக்கு ஏற்கெனவே இருந்ததுபோல 20 சதவீத இறக்குமதி வரி விதிக்க வேண்டும். சா்வதேச சந்தை மதிப்புக்கு ஏற்றவாறு மூலப்பொருளின் விலையை கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்தால் மட்டுமே மூடங்கும் நிலையில் உள்ள கரூா் பாரம்பரிய கொசுவலைத் தொழிலை காப்பாற்ற முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com