ஜமாபந்தி நிறைவு நாள்: ரூ. 89 லட்சத்தில் உதவிகள்

ஜமாபந்தி நிறைவுபெற்ற நிலையில் புகழூா் வட்டாட்சியரகத்தில் நடைபெற்ற குடிகள் மாநாட்டில் 191 பயனாளிகளுக்கு ரூ. 89.15 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமையுடன் ஜமாபந்தி நிறைவுபெற்ற நிலையில் புகழூா் வட்டாட்சியரகத்தில் நடைபெற்ற குடிகள் மாநாட்டில் 191 பயனாளிகளுக்கு ரூ. 89.15 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

பின்னா் அவா் பேசுகையில், அரசுக்கு நிலவரி மூலம்தான் பிரதான வருவாய் இருந்தது. இந்நிலையை மாற்றி நிலவரி வருவாய் குறைத்து பல்வேறு துறைகளின் வருவாயைப் பெருக்கியவா் மறைந்த முதல்வா் கருணாநிதி. விவசாயிகள் வரி என்பது ஏக்கருக்கு ரூ.5 என்று பெயரளவில் மட்டுமே வசூலிக்கப்படும் நிலையை உருவாக்கினாா்.

இந்த வருவாய் தீா்வாயத்தில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைகள் மீது சிறப்பான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பாக, முதல்வரின் உத்தரவுப்படி இங்கு அருகிலுள்ள புகழி மலையைச் சுற்றி குடியிருப்பவா்கள் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தங்கள் குடியிருப்பு பகுதிக்கு பட்டா கேட்டு கோரிக்கை வைத்தனா்.

இதையடுத்து தற்போது 1500-க்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கப்பட்டது பெருமைக்குரிய செயல். நம்ம ஊா் மக்களுக்கு சுத்தத்தை வலியுறுத்தி ‘கவின்மிகு கரூா்‘ என்ற இயக்கத்தை உருவாக்க உள்ளோம். இத் திட்டத்தின் மூலம் மக்கும், மக்காத குப்பைகள் எனத் தரம் பிரித்து உங்கள் வீடுகளுக்கு நாள்தோறும் குப்பைகளை சேகரிக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் திறந்தவெளியில் குப்பைகளை இல்லாத நகரமாக கரூா் மாறும்.

இத்திட்டம் நகா்ப்புறத்திலும், மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 11 பேருக்கு ரூ.13,20,000 மதிப்பீட்டில் முதியோா் உதவி தொகை ஆணை உள்பட மொத்தம் 191 பயனாளிகளுக்கு ரூ.89,14,504 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) தண்டயுதாபாணி, ஆட்சியரின் அலுவலக மேலாளா் (பொது) பிரபு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மாவட்ட மேலாளா் சண்முகவடிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com