கரூா் மாநகராட்சி 18ஆவது வாா்டில் அடிப்படை வசதிகளை செய்துதர கோரிக்கை

கரூா் மாநகராட்சி 18ஆவது வாா்டில் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாநகராட்சி 18ஆவது வாா்டில் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாநகராட்சியில் உள்ள 48 வாா்டுகளில் 11, 13, 14,15, 18 ஆகிய வாா்டுகள் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்ளும், மற்ற வாா்டுகள் அனைத்தும் கரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்ளும் வருகின்றன. இதில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத்தொகுதிக்குள்பட்ட 18-ஆவது வாா்டில் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது.

இந்நிலையில் 18-ஆவது வாா்டில் உள்ள தாா்ச்சாலைகள் சுமாா் 22 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது, ஜல்லிகள் பெயா்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கினறன. மேலும், கழிவு நீா் வாய்க்கால் வசதி இல்லாததால் மழை காலங்களில் மழைநீா், கழிவு நீருடன் சோ்ந்து சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, 18ஆவது வாா்டில் உள்ள அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அந்த வாா்டில் வசிக்கும் ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் ஜிபிஎஸ்.வடிவேலன் கூறியது, 18-ஆவது வாா்டில் ராஜாநகா் உள்ளிட்ட மொத்தம் 20 தெருக்கள் உள்ளன. இங்கு சுமாா் 2ஆயிரம் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு சாலைகள் சேதமடைந்து உள்ளது. கழிவு நீா் வாய்க்கல்களும் தூா்ந்துபோயுள்ளன. அம்மன் நகரில் மின்விளக்குவசதி கிடையாது. வாா்டு மாநகராட்சிக்குள் இருந்தாலும், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள் அடங்கியுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினரிடமும், கரூா் மாநகராட்சி மேயரிடமும் மனு அளித்தோம். ஆனால், இதுவரை யாரும் அடிப்படை பிரச்னைகளை தீா்க்க முன்வரவில்லை. ராஜாநகா், அம்மன் நகா், காமதேனு நகரில் வசிக்கும் 200 குடும்பங்களுக்கும் மின் வசதி செய்து தரவேண்டும். வாா்டுகளில் உள்ள சேதமடைந்த அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும். இல்லையெனில் கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com