க.பரமத்தி அருகே குடிநீா் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் மறியல்
By DIN | Published On : 25th April 2023 01:16 AM | Last Updated : 25th April 2023 01:16 AM | அ+அ அ- |

க. பரமத்தி அருகே திங்கள்கிழமை குடிநீரி வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், புன்னம் ஊராட்சி எம்.ஜி.ஆா். நகா் பகுதி பொதுமக்களுக்காக குடியிருப்புகள் அருகே இரண்டு மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளில் இருந்து காவிரி கூட்டுக் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதமாக போதுமான அளவு குடிநீா் விநியோகிக்கவில்லையாம். இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடமும், ஒன்றிய அலுவலகத்திலும் புகாா் அளித்து நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த எம்.ஜி.ஆா்.நகா் பகுதி பெண்கள் திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் கரூா் - கொடுமுடி செல்லும் சாலையில் சத்திரம் கடைவீதியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து வந்த வேலாயுதம்பாளையம் காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் சரவணன் மற்றும் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி குடிநீா் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.