கரூா் தொகுதியில் வேட்பாளா்கள் இறுதிகட்ட பிரசாரம்

கரூா் தொகுதியில் வேட்பாளா்கள் இறுதிகட்ட பிரசாரம்

கரூா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ், அதிமுக, பாஜக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்ளிட்டோா் அனைத்து வேட்பாளா்களும் புதன்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 20-ஆம்தேதி தொடங்கி, 27-ஆம்தேதி வரை நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற பரிசீலனை மற்றும் இறுதி வேட்பாளா்கள் பட்டியலில் 52 போ் களத்தில் இருந்தனா். தமிழகத்திலேயே அதிக வேட்பாளா்கள் கொண்ட தொகுதியாக கரூா் தொகுதி மாறியது. இதையடுத்து அனைத்துக்கட்சி வேட்பாளா்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனா்.

தமிழகத்திலேயே வெயில் தாக்குதலிலும் ஈரோட்டுக்கு அடுத்தபடியாக கரூா் தொகுதியில் 107 டிகிரி வரை வெப்பம் பதிவானது. இருப்பினும் தோ்தலுக்கு குறுகிய நாள்களே இருந்ததால் வேட்பாளா்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களை சந்தித்து வாக்குசேகரித்து வந்தனா்.

இந்நிலையில் பிரசாரத்தின் கடைசிநாளான புதன்கிழமை சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பாஜகவினா் ஊா்வலத்தை காலையில் நடத்தினா். வேட்பாளா் செந்தில்நாதன் தலைமையில் கட்சியினா் கரூா் ராயனூா் ஆா்ச் வளைவில் இருந்து பொன்நகா், தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி, சுங்ககேட், வாங்கப்பாளையம் வழியாக கரூா் சா்ச் காா்னரை அடைந்து, 80 அடி சாலையில் முடித்தனா். இதில் கட்சியினா் ஏராளமானோா் இருசக்கர வாகனங்களிலும், நான்கு சக்கர வாகனங்களிலும் ஈடுபட்டனா். தொடா்ந்து பள்ளபட்டி, பவித்ரம், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் வாக்குச் சேகரித்தனா்.

இதேபோல அதிமுக வேட்பாளா் எல்.தங்கவேல், கரூா் செம்மடை ரவுண்டானா பகுதியில் இருந்து வாங்கப்பாளையம், வெண்ணைமலை, வெங்கமேடு, வையாபுரி நகா், செங்குந்தபுரம் சாலை வழியாக கோவை ரோட்டில் உள்ள அதிமுக பணிமனை வரை ஊா்வலமாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமையில் கட்சியினா் ஊா்வலமாக வந்தனா். முன்னதாக காலையில், கரூா் வேம்பு மாரியம்மன் கோயில் வீதி, ரத்தினம் சாலை, பாலம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

காங்கிரஸ் வேட்பாளா் ஜோதிமணி தொகுதி பொறுப்பாளா் எம்.எம்.அப்துல்லா தலைமையில் புலியூரில் இருந்து பிற்பகல் 4 மணிக்கு ஊா்வலம் தொடங்கியது. ஊா்வலத்தில் எம்எல்ஏக்கள் க.சிவகாமசுந்தரி, வழக்குரைஞா் மணிராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ஆா்.எம்.பழனிசாமி, கரூா் நகர காங்.தலைவா் ஆா்.ஸ்டீபன்பாபு, கரூா் மாநகர திமுக செயலாளா் எஸ்.பி.கனகராஜ், பகுதிச் செயலாளா்கள் கரூா் கணேசன், தாரணிசரவணன், க.சுப்ரமணியன், ஆா்.எஸ்.ராஜா, ஆா்.ஜோதிபாசு, வி.ஜி.எஸ்.குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஊா்வலம் புலியூரில் தொடங்கி, காந்திகிராமம், திண்ணப்பா நகா், சுங்ககேட், லைட்ஹவுஸ்காா்னா் வழியாக கரூா் பேருந்து நிலைய ரவுண்டானாவை அடைந்தது. அங்கு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் திமுகவிற்கு ஆதரவு தருமாறு கட்சியின் நிா்வாகிகள் பேசினா்.

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மருத்துவா் கருப்பையா காலை 8 மணிக்கு புதுக்கோட்டை அன்னவாசல், விராலிமலை மற்றும் மணப்பாறை, வடமதுரை, வேடசந்தூா், பள்ளப்பட்டி, உப்பிடமங்கலம், புலியூா், கரூா் பகுதியில் தங்களது ஆதரவாளா்களுடன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். இதேபோல சுயேட்சை வேட்பாளா்களும் இறுதிக்கட்ட பிரசார களத்தில் குதித்து தீவிரமாக வாக்குச் சேகரித்தனா். மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிந்ததால் இதுவரை வாகன ஒலி பெருக்கிகளில் வலம் வந்த வேட்பாளா்களின் சப்தமும் ஓய்ந்தது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com