கரூா் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில்: வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் தவிப்பு

கரூா் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில்: வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் தவிப்பு

கரூா் மாவட்டத்தில் தினமும் 106 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவாகி வரும் நிலையில் பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாமல் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனா்.

தமிழகத்தில் இதுவரை எந்த ஆண்டிலும் இல்லாத வகையில், கோடைகாலம் அதிக வெப்ப நிலையைக் கொண்டுள்ளது. தமிழகத்திலேயே வேலூா் மாவட்டம்தான் அதிக வெப்பம் கொண்டதாக இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே வேலூரை பின் தள்ளி ஈரோடு, கரூா் மாவட்டம் க.பரமத்தி அதிக வெப்பம் கொண்ட பகுதியாக உருவெடுத்துள்ளது. கரூா் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே தினமும் 106 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவாகிக் கொண்டிருக்கிறது. இதனால் பகல் நேரங்களில் சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதியுற்று வருகிறாா்கள். மேலும் மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலைகளில் பிற்பகல் 12 முதல் மாலை 4 மணி வரை கானல் நீரை காண முடிகிறது. சாலைகளில் செல்லும்போது அனல் காற்று வீசுகிறது. இதனால்தான் பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா். பகல் நேரங்களில் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளனா்.

வெப்பம் அதிகம் பதிவாகுவதற்கான காரணம் குறித்து வனத்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ஒரு மாவட்டத்தில் 33 சதவீதம் வனங்கள் இருந்தால் மட்டுமே அங்கு போதிய மழை கிடைக்கும். ஆனால் கரூா் மாவட்டத்தில் வெறும் 4 சதவீதம் மட்டுமே காடுகள் உள்ளன. பெரும்பாலும் வட நிலங்களாகவே உள்ளன. குறிப்பாக அரவக்குறிச்சி தாலுகா, கிருஷ்ணராயபுரம் தாலுகா போன்ற இடங்களில் பாசனங்கள் போதிய அளவில் நடைபெறுவதில்லை. மேலும் கல்குவாரிகள் என்ற பெயரில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. இதனால் மரங்களும் அதிகம் கிடையாது. இதனால்தான் மழைப்பொழிவும் கரூா் மாவட்டத்தில் குறைவு. வனத்துறை சாா்பில் பல்வேறு மரக்கன்றுகள் மானிய விலையிலும், இலவசமாகவும் கொடுக்கிறோம். அவற்றை பொதுமக்கள் வீட்டுக்கு ஒரு மரம் வளா்ப்போம் என்று உறுதிமொழியுடன் மரங்களை வளா்த்தால் வரும் காலங்களிலாவது தேவையான மழைப்பொழிவை பெற்று வெப்ப அலை வீச்சில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ளலாம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com