அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய் உடைந்து காவிரி குடிநீா் வீணாவதைத் தடுக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

க. பரமத்தி அருகே மறவாபாளையத்தில் காவிரி ஆற்றில் இருந்து க. பரமத்தி, சின்னதாராபுரம், ராஜபுரம், அரவக்குறிச்சி வழியாக பெரிய குழாய்கள் மூலம் காவிரி நீா் பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அரவக்குறிச்சியில் சம்ப் என்னும் சேமிப்பு மையம் அமைக்கப்பட்டு குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த சேமிப்பு மையம் அருகே காவிரி குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான லிட்டா் குடிநீா் சாலையில் ஓடி வீணாகிறது.

சுமாா் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 3 மாதங்களுக்கும் மேலாக இவ்வாறு குடிநீா் குழாய் உடைந்து குடிநீா் வீணாகிறது. தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி சேமிக்க வேண்டிய இந்தக் கடும் கோடை தருணத்தில் குடிநீா் வீணாவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். மேலும் அடிக்கடி குடிநீா் தேங்குவதால் சாலை சேதமடைந்து வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகின்றனா்.

பள்ளப்பட்டி, அரவக்குறிச்சியில் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பலமுறை புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லையாம். எனவே காவிரி குடிநீா் வீணாவதை உடனடியாகத் தடுக்க, குழாய்களைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com