முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
லாடபுரம் மயிலூற்று அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
By DN | Published On : 25th November 2015 01:38 AM | Last Updated : 25th November 2015 01:38 AM | அ+அ அ- |

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், லாடபுரம் மயிலூற்று அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, இதை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
பெரம்பலுர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக விளங்கும் பச்சைமலை அடிவாரத்தில் உள்ளது லாடபுரம். இங்குள்ள மயிலூற்று அருவிக்கு குளிக்கவும், பச்சமலை தொடரின் அழகையும் கண்டு
ரசிக்கவும் ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர். பெரம்பலூர் மட்டுமன்றி திருச்சி, நாமக்கல், துறையூர், முசிறி, குளித்தலை, சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தற்போது நீர்வரத்து அதிகரித்திருப்பதாலும், சீசன் தொடங்கியுள்ளதாலும் சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.
சுற்றுலாத் தலமாக்க வலியுறுத்தல்: இந்நிலையில், லாடபுரம் மயிலூற்று அருவி, மலை அடிவாரத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளதால், அங்கு சில சமூக விரோத செயல்களும் நிகழ்ந்து வருகிறது. இதனால், அப்பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் மயிலூற்று அருவி சுற்றுலாத் தலமாக்கப்படும் என அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, கடந்த 2009ஆம் ஆண்டு மயிலூற்று அருவியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அப்போதைய மாவட்ட ஆட்சியர் எம். விஜயக்குமார், மலை அடிவாரத்திலிருந்து படிக்கட்டுகள், அருவி நீர் கொட்டும் பகுதியில் குளிப்பதற்கான தலம், உடைமாற்றிக் கொள்ளும் அறை, சிறுவர் பூங்கா சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான இடம் ஆகியவற்றின் வரைபடத்துடன் கூடிய கருத்துருவை வனத் துறையினர், சுற்றுலா துறையினருக்கு அனுப்பிவைத்தார். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், மயிலூற்று அருவியும், அங்கு செல்லும் வழியும் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது.
எனவே, மயிலூற்று அருவியை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, சீசன் காலங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.