மனுக்களை பதிய நீண்டநேரம் காத்திருக்கும் பொதுமக்கள்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனுக்களை பதிவு செய்வதற்காக பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்கின்றனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனுக்களை பதிவு செய்வதற்காக பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்கின்றனர்.
பொதுமக்கள் தங்களது குறைகளை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து, உரிய நிவாரணம் பெற வசதியாக ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்தோறும் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் பொதுமக்களால் அளிக்கப்படும் மனுக்களை ஆட்சியர் பரிசீலித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியரக சேவை மையத்தில் உள்ள கணினியில் பதிவு செய்து, பின்னர் சீல் வைத்து ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களிடம் அளிப்பது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், சேவை மையத்தில் போதிய பணியாளர்களும், கணினியும் இல்லாததால் மனுக்களை பதிவு செய்வதற்காக நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.
இதேபோல, கணினியில் பதிவு செய்யப்பட்ட மனுக்கள் மீது சீல் வைப்பதற்காக மற்றொரு வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
வரிசையில் நீண்டநேரம் காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியோருக்கும் எவ்வித முன்னுரிமையும் அளிக்காததால் அவர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்கு போதிய இருக்கை வசதி இல்லாததால், அலுவலக நுழைவு வாயில், கார் நிறுத்தும் இடம், நடைபாதைகளில் பொதுமக்கள் அமர்ந்து ஓய்வெடுக்க முயற்சிக்கின்றனர்.
இதனால் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஊர்க்காவல் படையினர் சிலருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.  எனவே, மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியோருக்கும் முன்னுரிமை அளித்து, அவர்களது மனுக்களை உடனடியாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல கணினியில் மனுக்களை பதிவு செய்யும் போது, அதேஇடத்தில் அந்த மனுக்கள் மீது சீல் வைத்து, மனுக்கள் பதிவு செய்யும் முறையை எளிமைப்படுத்த வேண்டும். மேலும், ஆட்சியரகத்தில் இருக்கை வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com