கல்குவாரிகள் ஏலத்தை நிறுத்தக்கோரி பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கும், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு  இடையூறாக உள்ள கல்குவாரிகளின் ஏலத்தை

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கும், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு  இடையூறாக உள்ள கல்குவாரிகளின் ஏலத்தை நிறுத்த வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தாவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். 
இதுகுறித்து பாடாலூர், கூத்தனூர், மலையப்ப நகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:  
பாடாலூர் ஊராட்சிக்குள்பட்ட ராஜாமலை பகுதியில் அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் குவாரிகளில், அளவுக்கு அதிகமான வெடி மருந்துகளை வைத்து பாறைகளை தகர்ப்பதால், பாடாலூர் பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கோயில்களில் அதிர்வுகள் ஏற்பட்டு, சுவர்களில் விரிசல் காணப்படுகின்றன. இது தொடர்பாக கிராம மக்கள் சார்பில், வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினரிடம் புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனவே, பாடாலூர் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் இயங்கும் அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரிகளை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். இல்லையெனில், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளனர். 
கல்குவாரிகளை மூட வேண்டும்: நாட்டார் மங்கலம் ஊராட்சிக்குள்பட்ட கூத்தனூரை சேர்ந்த பொதுமக்கள், கூத்தனூர் கிராமத்தில் ஏற்கெனவே இயங்கி வரும் கல்குவாரிகளால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது.  அதிக சப்தத்துடன் பாறைகள் தகர்க்கப்படுவதால் இரவு நேரங்களில் துங்கமுடியாமல் தவிர்த்து வருகிறோம். கிராமத்தில் உள்ள உள்ள குவாரிகள் ஏலம் விடுவது தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால், மீண்டும் ஏலம் விட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. 
மக்களுக்கு இடையூறாக உள்ள கல்குவாரிகளின் ஏலத்தை நிறுத்தி, நிரந்தரமாக கல்குவாரிகளை மூடவேண்டும். 
கிரஷர் அமைக்க எதிர்ப்பு:  காரை ஊராட்சிக்குள்பட்ட மலையப்ப நகரை சேர்ந்த பொதுமக்கள், மலையப்ப நகர் அருகே சுமார் 400 மீட்டர் தொலைவில் கிரஷர் அமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 
இங்கு, கிரஷர் அமைத்தால் விவசாயம், குடியிருப்பு, பள்ளிகள் பாதிக்கப்படும். எனவே மலையப்ப நகரில் கிரஷர் அமைப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com