பெண்ணைத் தாக்கிய முன்னாள் ஊராட்சி உறுப்பினர் கைது

பெரம்பலூரில் வாங்கிய பணத்தை திரும்பத் தராத  அழகுநிலைய பெண் உரிமையாளரைத் தாக்கிய முன்னாள் மாவட்ட

பெரம்பலூரில் வாங்கிய பணத்தை திரும்பத் தராத  அழகுநிலைய பெண் உரிமையாளரைத் தாக்கிய முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினரை பெரம்பலூர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
பெரம்பலூர் முத்து நகரைச் சேர்ந்தவர் சாமிநாதன் மகன் செல்வக்குமார் (46), மாவட்ட முன்னாள் ஊராட்சி உறுப்பினர் (திமுக). பெரம்பலூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி சத்யா (40), பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் அழகு நிலையம் வைத்துள்ளார். 
இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தவறான உறவு இருந்ததாம். அப்போது, செல்வக்குமாரிடமிருந்து வாங்கிய ரூ. 5 லட்சத்தை சத்யா திருப்பிக் கொடுக்கவில்லையாம். இதுகுறித்து, கடந்த ஆக. 17-ல் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த செல்வக்குமார் சத்யாவை தாக்கினார். 
இதுகுறித்து சத்யா அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், சத்யாவின் அழகு நிலையத்தில் வைத்திருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்த பதிவுகளை எடுத்து  சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட விடியோ பதிவுகள் தொலைக்காட்சிகளிலும் வியாழக்கிழமை ஒளிபரப்பப்பட்டன. 
இதையடுத்து, பெரம்பலூர் போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து செல்வக்குமாரை கைது செய்து, பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளைச்சிறையில் அடைத்தனர். முன்னதாக, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட செல்வக்குமாரிடம் கேட்டபோது, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக நகரச்செயலர் பிரபாகரன், விடியோ பதிவுகளை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். எவ்வித முகாந்திரமும் இல்லாமல், போலீஸார் என்னை கைது செய்துள்ளனர் என்றார் அவர்.

திமுகவிலிருந்து இடைநீக்கம்
பெரம்பலூரில் அழகு நிலையத்துக்குள் புகுந்து பெண்ணைத் தாக்கிய முன்னாள் கவுன்சிலர் இடைநீக்கம் செய்யப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம்,  அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் உறுப்பினர் எஸ். செல்வகுமார். திமுகவின் கட்டுப்பாட்டை மீறியும்,  கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று அன்பழகன் கூறியுள்ளார்.  பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் இயங்கிய அழகுநிலையத்தில் புகுந்து அதன் உரிமையாளரான சத்யாவைக் செல்வகுமார் தாக்கிய காணொலி சமூக வலைதளங்களில் பரவியது. அதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை திமுக தலைமை எடுத்துள்ளது.

ஸ்டாலின் எச்சரிக்கை
ரௌடித்தனம் செய்யும் திமுகவினர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், வியாழக்கிழமை வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், "திமுகவுக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில், பெரம்பலூரில் பெண்மணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார். தனிப்பட்ட பிரச்னைகள், விருப்பு, வெறுப்புகளைக் கொண்டு இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபடுபவர்களை திமுக அனுமதிக்காது. 
தனிநபரைவிட கழகமே உயர்ந்தது என்ற உணர்வின்றி செயல்படுபவர்களையும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பெண்களிடம் வரம்பு மீறி ரவுடித்தனமான செயல்களில் ஈடுபடுவோர் என யாராக இருந்தாலும், திமுக விதிகளின்படி அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்' என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com