கோடை கால விற்பனையைக் குறி வைக்கும் தரமற்ற குளிர்பான விற்பனை தடுக்கப்படுமா?

பெரம்பலூர் நகரில் கோடை கால விற்பனையைக் குறி வைத்து பலர் தரமற்ற குடிநீர் மற்றும் குளிர்பானங்கள்

பெரம்பலூர் நகரில் கோடை கால விற்பனையைக் குறி வைத்து பலர் தரமற்ற குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்வதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பெரம்பலூர் நகரில் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, பெரம்பலூர் நகரில் 105 டிகிரிக்கும் அதிகமாக வெயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் காரணமாக குளிர்பானக் கடைகள், சாலையோர தள்ளுவண்டிக் கடைகளில் கம்மங்கூழ், இளநீர், தர்ப்பூசணி விற்பனை களைகட்டியுள்ளது. இதைப் பயன்படுத்தி குறைந்த விலையில் பலர் குளிர்பானங்களை பாக்கெட்டுகள், பாட்டில்களில் அடைத்து விற்கத் தொடங்கியுள்ளனர்.
எந்த விதிகளையும் பின்பற்றாமல் தயாரிக்கப்படும் இந்தக் குளிர்பானங்களை குடிப்பவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக, பேருந்து நிலையம் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட மக்கள் அதிக அளவில் கூடும்  பகுதிகள் முதல் தெருக்களில் உள்ள பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகள் வரையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பெயர்களில் சில எழுத்துகளை மட்டும் மாற்றி பாட்டில்கள், பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்கின்றனர்.
இன்னும் சில குளிர்பானக் கடைகளில் உள்ளூரிலேயே தயாரிக்கப்படும் மோர், ஆரஞ்சு, லெமன், பாதாம் கீர், புரூட் ஜூஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான பழச்சாறுகள் விற்கப்படுகின்றன. 
இதுபோன்ற கடைகளில் குளிர்பானங்களில் வண்ணத்துக்கு ரசாயன உணவுப் பொருள்களுக்குத் தடை செய்யப்பட்ட வண்ணப் பொடிகளை பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.  மேலும், குளிர்பானங்களில் இனிப்புச் சுவை கிடைக்க சாக்கிரின் பவுடர் கலக்கப்படுகிறது. 
இதுபோன்ற கலவையை பருகுவோருக்கு வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்பட்டு, அலர்ஜி ஏற்பட்டு சளி, இருமல் உள்ளிட்ட நோய்கள் தாக்கும் நிலையுள்ளது. பல குளிர்பான கடைகளில் புரூட் ஜூஸ் என்னும் பெயரில் அழுகிய, தரமற்ற பழங்களை பயன்படுத்தி ஜூஸ் தயாரித்து கூடுதல் இனிப்பு சுவையுடன் விற்கின்றனர். 
இந்த வகை குளிர்பானங்களை பொதுமக்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வாங்கிக் குடித்து விட்டு, பல்வேறு நோய்கள் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. குளிர்பானக் கடைக்காரர்களும் கோடை வெயிலை பன்படுத்தி இந்தக் குளிர்பானங்களை அதிக விலைக்கு விற்கின்றனர். கடந்த ஆண்டு ரூ. 8 ஆக இருந்த லெமன், ஆரஞ்சு ஜூஸ் தற்போது ரூ. 10-க்கு விற்கப்படுகிறது. அதேபோல ரூ. 10 ஆக இருந்த புரூட் ஜூஸ், பாதாம் கீர் ரூ. 15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
தரமற்ற குடிநீர் பாக்கெட்டுகள்:அதேபோல, முன்னணி நிறுவனங்களின் குடிநீர் கேன்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் கேன் ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படுவதால், கிராமப்புற மக்கள் அவற்றை வாங்குவதில்லை. அதற்கு பதிலாக 200 மில்லி அளவு கொண்ட குடிநீர் பாக்கெட்டுகளை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். 
இதைக் கருத்தில்கொண்ட சிலர், தரமற்ற குடிநீரை பாக்கெட்டுகளில் அடைத்து வியாபாரிகள் மூலம் விற்கின்றனர். ரூ. 1-க்கு வாங்கும் குடிநீர் பாக்கெட் ரூ. 2-க்கு விற்பதால் அதிக லாபம் காரணமாக இவற்றை விற்பனை செய்வதில் சில்லரை வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 
இதுபோன்ற குடிநீர் பாக்கெட்டுகளில் தயாரிக்கும் தேதி, காலாவதியாகும் தேதி, உற்பத்தியாளரின் முகவரி, ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ளிட்ட எந்தவித தகவல்களும் இருக்காது.
 இதுகுறித்து, வியாபாரிகளிடம் கேட்டாலும் முறையாக பதில் அளிப்பதில்லை. இதனால், படிப்பறிவில்லாத, ஏழை, எளிய கிராமப்புற மக்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். 
இதுகுறித்து சுகாதாரத் துறையினர் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு தரமற்ற குளிர்பான, குடிநீர் பாக்கெட்களை தடை செய்யவும், சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்கப்படும் குளிர்பான கடைகள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கவும் சுகாதாரத் துறை அதிகாரிகளும், உணவுப் பாதுகாப்புத் துறையினரும் நடவடிக்கை வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com