அனைத்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் விடுதலை சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலவலக வளாகத்தில்

விவசாயிகள் விடுதலை சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலவலக வளாகத்தில் அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரனிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: 
தற்போதுள்ள சூழ்நிலையில் விவசாயிகள் கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். விவசாய உற்பத்திச்செலவு அதிகரித்து வரும் நிலையில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு குறைந்தபட்ச கட்டுப்படியான விலை கிடைக்காமல் அவதியுறுகின்றனர். இதனால் விவசாயத் தொழில் பாதிக்கப்பட்டு கடன் சுமையில் தவித்து வருகின்றனர். 
இந்த விரக்தியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். 
2017 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அதில், கடன் தொல்லையிலிருந்து விவசாயிகள் விடுபடுவதற்கும், விடுதலை சட்டம் கொண்டு வருவதற்கும், விவசாய உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதம் செய்யும் சட்டம் கொண்டு வருவதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
அந்த தீர்மானங்களை மக்களவையில் ராஜுஷெட்டி, மாநிலங்களவையில் கே.கே.ராகேஷ் ஆகியோரால் தனிநபர் மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டது. 
இந்த மசோதா கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பல்வேறு விவசாய அமைப்புகளின் தலைவர்கள் குடியரசு தலைவரை சந்தித்தபோது, விவசாயிகள் விடுதலை சட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றப்படவில்லை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. 
இதில், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் என். செல்லதுரை, ஆர். ராஜாசிதம்பரம், வீ. ஞானசேகரன், ஏ.கே. ராஜேந்திரன், சக்திவேல், பொன்னுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com