சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் ஆய்வு

பெரம்பலூரில், சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

பெரம்பலூரில், சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழக சட்டப்பேரவை மனுக்கள் குழுத் தலைவரும், அரசுக் கொறடாவுமான சு. ராஜேந்திரன் தலைமையிலான குழு உறுப்பினர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களுமான உ. தனியரசு, க. அன்பழகன், முருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பெரம்பலூரில் ஆய்வு மேற்கொண்டனர்.
பெரம்பலூர் ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தலைமை வகித்தார். சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் ஆய்வு கூட்டத்தைத் தொடக்கி வைத்தார். சட்டப்பேரவை மனுக்கள் குழுத் தலைவர் சு. ராஜேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் பெறப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு மற்றும் மறு ஆய்வு மேற்கொண்டனர். 
தொடர்ந்து, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கட்டப்படும் புதிய கட்டடங்களின் கட்டுமானப் பணி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெறும் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தனர்.
இதுதொடர்பாக சட்டப் பேரவை மனுக்கள் குழுத் தலைவர் சு. ராஜேந்திரன் கூறியது:
பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக இம்மனுக்கள் குழுவுக்கு மொத்தம் 172 மனுக்கள் வந்தன. இதில், 47 மனுக்கள் மீதான கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. 32 மனுக்கள் நிலுவையில் உள்ளன. எஞ்சியுள்ள 93 மனுக்கள் பரிசீலனைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்த அறிக்கை சட்டப்பேரவை கூட்டத்தில் சம்ர்பிக்கப்பட்டு ஒப்புதல் பெற்று அறிவிக்கப்படும். அதனால் மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து தற்போது தெரிவிக்க இயலாது என்றார் அவர்.
தொடர்ந்து, கடந்த 7 ஆண்டுக்கு முன் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் பி. ரமேஷ் அளித்த மனு மீது நடவடிக்கை எடுத்த பேரவைத் குழுவினர், பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் பெரம்பலூர்- களரம்பட்டி வழித்தடத்தில் செல்லும் பேருந்தை தொடக்கி வைத்தனர். 
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், பெரம்பலூர் தொகுதி தொகுதி எம்எல்ஏ  இரா. தமிழ்ச்செல்வன், குன்னம் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி. ராமச்சந்திரன் மற்றும் அனைத்து  அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
அரியலூரில்: அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர். 
அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர்  தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் அரியலூரில் ரூ. 28.40 கோடியில் கட்டப்படும் அரியலூர் - பெரம்பலூர் இணைப்பு சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம், அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 6.16 கோடியில் 200 படுக்கைகள் மற்றும் அறுவைச் சிகிச்சை அரங்கங்களுடன் கூடிய கட்டடப் பணிகள், அதே கட்டடத்தில் ரூ. 88 லட்சத்தில் தீயணைப்பு உபகரணங்கள் அமைக்கும் பணி, தீயணைப்புக் கட்டுப்பாட்டு அறை கட்டடம், ரூ. 40.50 லட்சத்தில் சாய்தளம் அமைக்கும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.  மேலும், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பில் அரியலூர் நகராட்சி மூலம் கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 
 ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் டி. ஜி. வினய்,  சட்டப்பேரவை மனுக்கள் குழு உறுப்பினர்கள் க. அன்பழகன், பா. ஆறுமுகம், மு. சக்கரபாணி, துரை. சந்திரசேகரன், உ. தனியரசு, பி. முருகன், கே.எஸ். விஜயகுமார், செயலர் கி. சீனிவாசன், இணைச் செயலர் சாந்தி, குழு அலுவலர் வெ. சகுந்தலா, சார்புச் செயலர் மு. மோகன்ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் கா. பொற்கொடி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 இக்குழுவினர் புதன்கிழமை (ஆக.14) மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் முன்னிலையில், மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி பொதுமக்கள், சங்கங்களிடமிருந்து மனுக்கள் பெறவுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com