அதிகரித்து வரும் மயில்களால் பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை

பெரம்பலூர் மாவட்டத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு மயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்

பெரம்பலூர் மாவட்டத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு மயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பயிர் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். சரணாலயம் அமைத்து மயில்களையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 
பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம், வெண்பாவூர், சித்தளி, பேரளி, அன்னமங்கலம், அரசலூர், பாடாலூர் உள்பட பல இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வனக் காப்புக்காடுகள் உள்ளன. இங்கு மயில், மான், குரங்கு, காட்டுப்பன்றி,  முயல் உள்ளிட்டவை வசிக்கின்றன. அவ்வப்போது இவை உணவுக்காகவும், குடிநீருக்காகவும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்புகளுக்கும், நெடுஞ்சாலைக்கும் வருகின்றன. 
பெரும்பாலும் வனப் பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களை இரவு நேரங்களில் வன விலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, மயில், குரங்கு, காட்டுப் பன்றிகளால் விவசாய நிலங்கள் பெரிதும் சேதமடைகின்றன. தற்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் நிலக்கடலை அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளதால், அவற்றை காட்டுப் பன்றிகள் கூட்டம், கூட்டமாகச் சென்று சேதப்படுத்தி வருகின்றன. 
வன விலங்குகளைக் கட்டுப்படுத்தக் கோரி, விவசாயிகள் குறைதீர் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆட்சியர், வனத்துறை அலுவலர்களிடம் பலமுறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. 
இந்நிலையில், கூட்டம், கூட்டமாக விவசாய நிலங்களை நோக்கி படையெடுக்கும் மயில்களின் எண்ணிக்கையை பகல் நேரங்களிலேயே காணமுடிகிறது. 
முன்பெல்லாம் வனப்பகுதிகளில் மட்டுமே சுற்றித்திரிந்த மயில்கள், இனப்பெருக்கம் அதிகரித்ததால் விவசாய நிலங்களை நோக்கியும், குடியிருப்புப் பகுதிகளை நோக்கியும் இரை தேடி வரத் தொடங்கியுள்ளன. நெல், சோளம், பருத்திக்காய் என எந்தப் பயிர்களையும் விட்டு வைக்காமல் மயில்கள் இரையாக்குவதால், பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் மகசூல் இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.  தண்ணீரின்றி விளைச்சல் பாதியாகக் குறைந்துவிட்ட நிலையில், மீதமுள்ள பயிர்களையும் மயில்கள் அழித்துவிடுவதாகக் கூறுகின்றனர் விவசாயிகள். 
தேசியப் பறவை என்பதால் மயில்களுக்கு இடையூறு ஏற்படுத்த முடியாமலும், அதே வேளையில் பயிர்களை காப்பாற்ற முடியாமலும் விவசாயிகள் அவுதியுறுகின்றனர்.  எனவே, மலைப்பகுதிகளில் யானைகளைக் கட்டுப்படுத்த வேலி அமைப்பதுபோல், பெரம்பலூர் மாவட்டத்தில் மயில்களிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் விவசாயிகள்.  அந்த அளவுக்கு மயில்களின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. 
மயில்களை உணவாகக் கொள்ளும் நரி உள்ளிட்ட விலங்குகள் குறைந்ததே மயில்களின் அதிகரிப்புக்கு காரணமாகக் கூறப்படுகிறது.  சரணாலயம் அமைத்துப் பராமரித்தால் மயில்களையும், அதே நேரத்தில் விவசாய பயிர்களையும் காப்பாற்ற முடியும் என்கின்றனர் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள். மயில்களுக்கு பயந்தே காலை முதல் இரவு வரை சாகுபடி செய்யப்பட்ட 
விவசாய நிலங்களில் காவல் காக்க வேண்டிய சூழல் நிலவுவதாக கூறும் விவசாயிகள், இப் பிரச்னைக்கு வனத் துறையினர் உரிய தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.  
பெரம்பலூர் மாவட்டத்தில் சாலையோரங்களிலும், விவசாய நிலங்களிலும் அதிகளவில் சுற்றித்திரியும் மயில்களை காண அழகாக இருந்தாலும், அதன் அதிகரிப்பால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். 
இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறியது:
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல் சாகுபடி செய்யும் வயல்களில் தற்போது பசுந்தீவனப் பயிர்களான சோளம், மக்காச்சோளம், சின்ன வெங்காயம் உள்ளிட்ட பல பயிர்களைச் சாகுபடி செய்துள்ளோம். கிணற்றுப் பாசனத்தை நம்பியே சாகுபடி செய்யப்பட்டுள்ள இப் பயிர்கள் தற்போது நன்கு செழித்து வளர்ந்துள்ள நிலையில் மயில்கள் கதிர்களை விட்டு வைக்காமல் சேதப்படுத்துகின்றன. 
மயில்கள் தேசியப் பறவை என்பதால் மற்ற பறவையினங்களைப் போல அப்புறப்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, வனத் துறையினர் தலையிட்டு மயில்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.   தேசியப் பறவையான மயில்களையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதே பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com