ஏடிஎம் பணம் ரூ. 16 லட்சத்தை கொள்ளையடித்தவர் கைது

திருச்சியில் ரூ. 16 லட்சத்தை கொள்ளையடித்த நபர் பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை இரவு பிடிபட்டார். 


திருச்சியில் ரூ. 16 லட்சத்தை கொள்ளையடித்த நபர் பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை இரவு பிடிபட்டார். 
        திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த ஸ்டீபன் (42). வெள்ளிக்கிழமை இரவு மதுபோதையில் பெரம்பலூர் பாலக்கரை பகுதிக்கு வந்த இவர்,  அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநரான பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரத்தைச் சேர்ந்த மேகவர்ணம் மகன் முருகையா (42) என்பவரிடம் அப்பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார். 
இதையடுத்து முருகையா, தனது ஆட்டோவில் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள தனியார் விடுதிக்கு அவரை அழைத்துச் சென்றார். 
விடுதி மேலாளர் அடையாள ஆவணங்களைக் கேட்டதற்கு, ஸ்டீபன் தனது டிராவல்ஸ் பேக்கை திறந்து  எடுக்கும்போது, அதில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதைக் கண்ட ஆட்டோ ஓட்டுநருக்கு ஸ்டீபன் மீது சந்தேகம் ஏற்படவே அவரை வேறு விடுதிக்குச் செல்வதாகக் கூறி பெரம்பலூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று போலீஸாரிடம் ஒப்படைத்தார். 
போலீஸார் விசாரணையில், திருச்சி பாலக்கரை அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த சவரிமுத்து மகன் ஸ்டீபன் (42),  தனது பேக்கில் 500 ரூபாய் நோட்டுக்கட்டுகளும், 100 ரூபாய் நோட்டுக் கட்டுகளும் என மொத்தம் ரூ. 12 லட்சத்து 97 ஆயிரத்து 200 வைத்திருந்ததும், திருச்சியில் அண்மையில் சிட்டி யூனியன் வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்புவதற்கு கொண்டுவரப்பட்ட ரூ. 16 லட்சம் உள்ள பையை, திருச்சி அம்பிகாபுரத்தைச் சேர்ந்த அருண் என்ற ஊழியரிடமிருந்து கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, திருச்சி மாவட்ட துணை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாரிடம் பெரம்பூர் போலீஸார் ஸ்டீபனையும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும் ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com