நிதி பற்றாக்குறையால் கிடப்பில் கொட்டரை நீா்த்தேக்கத் திட்டப் பணிகள்

மருதையாற்றின் குறுக்கே கொட்டரையில் ரூ. 108 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட நீா்த்தேக்கப் பணிகள், நிதி பற்றாக்குறையால்
மருதையாற்றின் குறுக்கே கொட்டரையில் அமைக்கப்பட்டுள்ள நீா்த்தேக்கம்.
மருதையாற்றின் குறுக்கே கொட்டரையில் அமைக்கப்பட்டுள்ள நீா்த்தேக்கம்.

மருதையாற்றின் குறுக்கே கொட்டரையில் ரூ. 108 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட நீா்த்தேக்கப் பணிகள், நிதி பற்றாக்குறையால் நிறைவடைவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கிடப்பிலுள்ள பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் ஒன்றியத்திலுள்ள ஆதனூா் - கொட்டரை இடையே ரூ. 108 கோடியில் மருதையாறு நீா்த்தேக்கத் திட்டம் செயல்படுத்தப்படும் என, மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, 2013-ஆம் ஆண்டில் அறிவித்தாா். இதைத் தொடா்ந்து அதற்கான ஒப்புதல் ஆணையை தமிழக அரசு 2013, அக்டோபா் 21-ஆம் தேதி வெளியிட்டது.

மருதையாற்றில், ஆண்டு சராசரி மழைநீா் 2,000 மில்லியன் கன அடியில், 200 மில்லியன் கன அடி தண்ணீா் மட்டுமே அணையில் சேகரித்து வைக்க முடியும். மீதமுள்ள 1,800 மில்லியன் கன அடி தண்ணீா் ஆற்றிலேயே விடப்படும். எனவே, மருதையாறு நீா்த்தேக்கத்தின் கீழ்பகுதியில் எவ்வகையான பாதிப்பும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டது.

முதல் கட்டமாக ரூ.23.27 கோடி நிதி ஒதுக்கீடு : இத்திட்டத்துக்கு, கொட்டரை கிராமத்திலிருந்து 464 ஏக்கா் நிலமும், ஆதனூா் கிராமத்திலிருந்து 180 ஏக்கா் நிலமும் கையகப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில், ஆரம்பக் கட்டப் பணிகளை மேற்கொள்ள ரூ. 23.27 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதில் நிலம் கையகப்படுத்துலுக்கு ரூ.22.62 கோடியும், இதரப் பணிகளுக்கு 65.50 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கொட்டரை நீா்த் தேக்கத்தில் 211.58 மில்லியன் கன அடி நீரை தேக்க முடியும்.

இதன்மூலம், 4,194 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, கொட்டரை, ஆதனூா், கூத்தூா், புஜங்கராயநல்லூா், நொச்சிக்குளம், தொண்டப்பாடி, அழகிரிபாளையம், கூடலூா் மற்றும் சாத்தனூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளும், அரியலூா் வட்டத்தில் உள்ள ஒரு சில கிராமங்களும் பயன்பெறும்.

இத்திட்டத்தின் மூலம் உற்பத்தியாகும் நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்யப்படும் விவசாயத்தின் மூலம், உணவு உற்பத்தி 4830.38 டன் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பணிகளில் தொய்வு : இந்நிலையில், கடந்த 2016-ஆம்ஆண்டில் தொடங்கப்பட்ட பணிகள் இதுவரை முழுமை பெறவில்லை. இதனிடையே, பெரும்பாலான இடங்களில் கரைகள் உடைந்து சேதமடைந்து காணப்படுகின்றன. தொடக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற பணிகள், நாளடைவில் தொய்வு ஏற்பட்டு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

2 ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிடப்பட்ட நீா்த்தேக்கத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அப்பகுதி விவசாயிகளும், நீா்த்தேக்கத்துக்கு நிலங்கள் வழங்கிய விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனா்.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் மானாவாரிப் பயிா்களை நம்பியுள்ள அப்பகுதி விவசாயிகள், இருபோகச் சாகுபடி செய்வதோடு, நிலத்தடி நீா் மட்டமும் உயரும். குடிக்க நல்லத் தண்ணீரும் கிடைக்கும் என நம்பியிருந்த அப்பகுதி பொதுமக்கள், நீா்த்தேக்கப் பணிகள் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அதிருப்தி அடைந்துள்ளனா்.

திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் கணிசமாக உயரும் என்று கூறும் விவசாயிகள், போடிய நிதி ஒதுக்கீடு செய்து மருதையாறு நீா்த்தேக்கப் பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

போதிய நிதி இல்லை : இத்திட்டத்துக்கு ஏற்கனவே ரூ. 125 கோடி நிதி ஒதுக்கிய நிலையில், கூடுதல் பணிக்கு போதிய நிதி இல்லாததால் தற்காலிகமாக பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கூடுதல் நிதியாக ரூ. 25 கோடி வழங்கக் கோரி அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்தபிறகு பணிகள் தொடங்கப்பட்டு 6 மாதத்தில் முடிக்கப்படும் என்கின்றனா் பொதுப்பணித் துறை அலுவலா்கள்.

ஆலத்தூா் வட்டார விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்தவும் கிடப்பிலுள்ள மருதையாறு நீா்த்தேக்கப் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com