பெரம்பலூர், அரியலூரில் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்

பெரம்பலூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை புதன்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை புதன்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பொங்கல் பண்டிகை முந்தைய நாளான திங்கள்கிழமை போகி தினத்தன்று, பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கிணங்க, மக்கள் தங்களது வீடுகளில் உள்ள பழைய பொருள்களை அப்புறப்படுத்தினர். பின்னர், செவ்வாய்க்கிழமை தை பொங்கல் தினத்தன்று மக்களுக்கு உணவளிக்கும் இயற்கைக்கும், விவசாயத்துக்கும் நன்றி தெரிவிக்க, அதிகாலையிலேயே பெண்கள் தங்களது வீட்டுவாசலில் வண்ணக் கோலமிட்டு, புதுப் பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானை குடும்பத்துடன் வழிபட்டனர். 
பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் அதிகளவில் உள்ளதால், மாட்டுப் பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி, விவசாயிகளின் உழவுத் தொழிலுக்கும், வயலுக்கும் உறுதுணை புரிந்த கால்நடைகளுக்கும், பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், புதன்கிழமை காலையிலேயே விவசாயிகள் தங்களது மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, மாலை அணிவித்து, பொட்டு வைத்து பூஜைகளுக்கு  தயார்படுத்தினர். 
பின்னர், மாலை சுமார் 5 மணியளவில், அவரவர் வீடுகளுக்கு முன் பொங்கல் வைத்து, புத்தாடைகள் உடுத்தி இயற்கை அன்னைக்கும், மாடுகளுக்கும் பொங்கல் படைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அந்தப் பொங்கலை மாடுகளுக்கு வழங்கி வழிபட்டனர்.  
பல்வேறு கிராமங்களில், விவசாயிகள் மாடுகளை தங்கள் கிராம கோயில் பகுதியில் உள்ள ஏரிக்கரை மற்றும் குளக்கரை பகுதிகளுக்கு ஊர்வலமாக ஓட்டிச் சென்று திரும்பி வந்தனர்.  பூஜைகளை முடித்த பிறகு, சிறுவர்களை அழைத்துக் கொண்டு மாட்டு வண்டியில் பல்வேறு தெருக்களில் சுற்றி வலம் வந்தனர். மாட்டுப் பொங்கலையொட்டி விவசாயிகள் புத்தாடை உடுத்தி, வெகுவிமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
தனலட்சுமி சீனிவாசன் நிறுவனத்தில் மாட்டுப் பொங்கல்:  பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன வளாகத்தில் மாட்டுப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தலைமை வகித்தார். செயலர் பி. நீல்ராஜ், இயக்குநர்கள் பி. ராஜபூபதி, பி. மணி, ஆர். ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் உள்ள மாட்டுப் பண்ணையில் நடைபெற்ற விழாவில், பொங்கல் வைக்கப்பட்டு  சுவாமிக்கு பூஜை செய்யப்பட்டு, அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு பொங்கல் ஊட்டப்பட்டது. 
பின்னர், வெளி மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், பணியாளர்களுக்கும் பொங்கல், கரும்புகள் வழங்கப்பட்டது.
இதில், தலைமை நிர்வாகி அலுவலர் எஸ். நந்தகுமார், நிதி அலுவலர் செல்வகுமார் உள்பட அனைத்துக் கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர்கள் பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர், தா.பழூர், செந்துறை, ஜயங்கொண்டம், ஆண்டிடம், பொன்பரப்பி, மீன் சுருட்டி உள்ளிட்ட பல இடங்களில் மாட்டு பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாடுகளின் தொழுவத்தை சுத்தம் செய்து அதன் உரிமையாளர்கள் கால்நடைகளை குளிப்பாட்டினர். 
பின்னர், மாடுகளின் கொம்புகளை சீவி, வர்ணங்கள் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிட்டு அழகு சேர்த்தனர். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி, திருநீறும், குங்குமப் பொட்டையும் பூசி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 
வேளாண் கருவிகள் சுத்தம், மாடுகளுக்கு புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும், உழவுக் கருவிகளை சுத்தம் செய்தும் மாட்டுப் பொங்கலுக்கு தயாராகினர். பின்னர், புதன்கிழமை மாலை வழிபாடு நடத்தி மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றை ஊட்டி பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். பண்டிகையை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 
சொந்த ஊரில் தொல்.திருமாளவன்  ... : விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாளவன் அவரது ஊரான அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள அங்கனூரில் கிராம மக்களுடன் புதன்கிழமை மாட்டுப்பொங்கலை கொண்டாடினார். 
அப்போது, கிராமத்தின் மாரியம்மன் கோயில் அருகே வைக்கப்பட்டிருந்த புதுப் பானையில் பச்சரிசி இட்டு, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். தொடர்ந்து, படையலிட்டு, கால்நடைகளுக்கு பொங்கலை ஊட்டிவிட்டார். தொடர்ந்து, கிராம மக்களுக்கு இனிப்புகளை வழங்கியதுடன், 200 பேருக்கு வேட்டிசேலைகளை வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.  நிகழ்ச்சியில், கிராம மக்கள் மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.        

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com