Enable Javscript for better performance
பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர மாணவர்களுக்கு அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

    By DIN  |   Published on : 14th June 2019 09:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
    இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
    பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கென விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ, மாணவிகளும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகளில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐடிஐ படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள். இந்த விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
    பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்கு மிகாமல், இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ-க்கு மேல் இருக்க வேண்டும்.  இந்தத் தொலைவு விதி மாணவியருக்கு பொருந்தாது. இதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தலிருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஜூன் 20 ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை ஜூலை 15 ஆம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. ஒவ்வொரு விடுதியிலும், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai