11 பாடங்களில் மாணவர் சேர்க்கை ரத்து: பெரம்பலூர் அரசுக் கல்லூரி மாணவர்கள் மறியல்
By DIN | Published On : 18th June 2019 09:00 AM | Last Updated : 18th June 2019 09:00 AM | அ+அ அ- |

பெரம்பலூர் அரசுக் கல்லூரியில், நிகழாண்டு 11 பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, அக்கல்லூரி மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூரில் கடந்த 18 ஆண்டுகளாக இயங்கி வந்த பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி, நிகழாண்டு முதல் அரசுக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் 14 இளநிலை பாடப்பிரிவுகள், 6 முதுநிலை பாடப்பிரிவுகள் என மொத்தம் 20 பாடப்பிரிவுகளில் வகுப்புகள் நடத்தப்பட்டன.
அரசுக் கல்லூரியாக நிலை உயர்த்தப்பட்ட நிகழ் கல்வியாண்டு முதல் இளநிலையில் 5 பாடப்பிரிவுகளும், முதுநிலையில் 6 பாடப்பிரிவுகளும் என மொத்தம் 11 பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. இதனால், சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.
இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை கல்லூரி திறக்கப்பட்டது. 11 பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கல்லூரி மாணவ, மாணவிகள் பெரம்பலூர் - துறையூர் சாலையில் குரும்பலூரில் கல்லூரி எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக மாணவர்கள் சேர்க்கையைத் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறத்தியும் முழக்கமிட்டனர்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் கல்லூரி முதல்வர் மற்றம் பெரம்பலூர் காவல் துறையினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலைக் கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.