தனியார் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 

கொல்கத்தா அரசு மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர்களைத் தாக்கிய சம்பவத்தைக் கண்டித்து பெரம்பலூர் மாவட்டத்தில்

கொல்கத்தா அரசு மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர்களைத் தாக்கிய சம்பவத்தைக் கண்டித்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளை மூடி மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். 
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, 2 பயிற்சி மருத்துவர்களை நோயாளியின் உறவினர்கள் தாக்கிய சம்பவத்தைக் கண்டித்து, நாடு முழுவதும் 24 மணிநேரம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தது.  
அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளை மூடி மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனைகளில் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காததால் புற நோயாளிகள் பெரிதும் அவதியடைந்தனர். உள் நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டது. 
கருப்பு பட்டை அணிந்து போராட்டம்: இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், கருப்பு பேட்ஜ் அணிந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். புற நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பிரிவுகள் வழக்கம்போல் செயல்பட்டன. அத்தியாவசிய அறுவை சிகிச்சையை தவிர மற்ற அறுவை சிகிச்சைகள் ஒத்தி வைக்கப்பட்டன. 
ஆர்ப்பாட்டம்: பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், இந்திய மருத்துவ சங்க மாவட்டத் தலைவர் ராஜாமுகமது தலைமையிலும், அரசு மருத்துவர்கள் சங்க மாவட்டத் தலைவர் அர்ச்சுனன் தலைமையிலும், மருத்துவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் மருத்துவமனை மற்றும் மருத்துவர் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
அரியலூரில்..அரியலூர் தலை மை மருத்துவமனை வளாகத்தில் தமிழக  டாக்டர்கள் சங்க மாவட்டத் தலைவர் கொளஞ்சிநாதன் தலைமையில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  
அதேபோல், இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள 65 தனியார்  மருத்துவமனைகள் மூடப்பட்டு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com