நிலத்தடி நீர் மட்டம் சரிவு: தமிழக அளவில் பெரம்பலூர் முதலிடம்

நிகழாண்டில், தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் 52 அடி நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளதால் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால்,
நிலத்தடி நீர் மட்டம் சரிவு: தமிழக அளவில் பெரம்பலூர் முதலிடம்


பெரம்பலூர்: நிகழாண்டில், தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் 52 அடி நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளதால் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு மாவட்ட மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழக அரசு மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை செயல்படுத்தியது. இத் திட்டம் சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றதுடன், அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்கப்பட்டது.

இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக அதிகரித்தது . நாளடைவில் இத் திட்டம் செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது பழைய வீடுகள் மட்டுமின்றி, புதிய குடியிருப்புகளில் கூட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்துவதில்லை. அதை கண்காணிக்க வேண்டிய அரசு அலுவலர்களும் அலட்சியப் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். மழைநீரை வீணாக்கியதால், தற்போது கொளுத்தும் கோடை வெயிலில் தண்ணீருக்காக பெரம்பலூர் மாவட்ட மக்கள் இரவு நேரங்களில் கூட தண்ணீர் குழாய் அருகே காத்துக்கிடக்கின்றனர். 

பெரம்பலூர் மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்கும் முன்பே, அதாவது கடந்த பிப்ரவரி மாதம் தொடக்கத்திலேயே கடுமையான வெயில் தாக்கம் காணப்பட்டது. கோடைக்காலம் தொடங்கிய நாள் முதல் அக்னி நட்சத்திரம் முடியும் வரையிலும் நாள்தோறும் 100 டிகிரி வெப்பம் பதிவானதோடு,  பெரம்பலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 104 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. இந்தக் கோடையில் கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர்மட்டம் குறைந்தது. இதனால், இம் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் தண்ணீர்  தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது. 

வடகிழக்கு வருவமழை பெய்யாத நிலையில், அனைத்து தேவைகளுக்கும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நீர்வளத்துறை சேகரித்துள்ள விவரங்களின் அடிப்படையில், கடந்த ஆண்டை விட நிகழாண்டில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. 

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக நிலத்தடி நீர்மட்ட நிலவரம் குறித்து, மத்திய நிலத்தடி நீர் ஆய்வுத்துறை மாதந்தோறும் அரசுக்கு அறிக்கை அளித்து வருகிறது. இதில், நிலத்தின் தரைமட்டத்தில் இருந்து கிணறுகளில் நீர்மட்டம் எத்தனை மீட்டர் ஆழத்தில் இருந்தது எனக் கணக்கிடப்பட்டு அறிக்கை அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2018 மே மாத நிலவரத்துக்கும், நிகழாண்டு 2019 மே மாத நிலவரத்துக்குமான நிலத்தடி நீர்மட்டம் ஒப்பீடு பட்டியல் அறிக்கை தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.  

அந்த அறிக்கையில், தமிழகத்தில் பெரம்பலூர் உள்பட 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில், அதிகபட்சமாக பெரம்பலூரில் 13.77 மீட்டர் அதாவது 52 அடிக்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது எனவும், கடந்த ஆண்டை காட்டிலும், நிகழாண்டில் 4.65 மீட்டர் அதாவது 15 அடிக்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. 

பெரம்பலூர் மாவட்டத்தை பொறுத்தவரை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை முறையாக பராமரிக்காதது, நீர்நிலைகள் பராமரிப்பில் மெத்தனப் போக்கு உள்ளிட்ட பல காரணங்களால் நிலத்தடி நீர்மட்டமானது, எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக கீழே சென்றதால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகளவிலான மரக்கன்றுகள் நட்டு வைத்து மழை பெறுவதோடு, அந்த மழைநீரை முறையாக சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கவும், ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை பராமரிக்க தமிழக அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com