காசோலை மோசடி: பால் வியாபாரிக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பெரம்பலூர் அருகே காசோலை மோசடியில் ஈடுபட்ட லாரி உரிமையாளர், பால் வியபாரிக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு

பெரம்பலூர் அருகே காசோலை மோசடியில் ஈடுபட்ட லாரி உரிமையாளர், பால் வியபாரிக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. 
பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் நைனப்பன் (63). பால் வியாபாரி.
அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (53). லாரி உரிமையாளர். இருவருக்கும் ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில் ரமேஷ் தனது தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக நைனப்பனிடம் 2014 ஆம் ஆண்டு ரூ. 3 லட்சம் கடனாகப் பெற்றார். 
இந்தக் கடன் தொகையை திருப்பித் தருமாறு நைனப்பன் கேட்டதற்கு, ரமேஷ் ரூ. 3 லட்சத்துக்கான காசோலையைக் கொடுத்துள்ளார்.  ஆனால், அவரது வங்கிக் கணக்கில் தொகை இல்லாததால் காசோலை திரும்பி வந்துவிட்டது. இதனால் பாதிப்புக்குள்ளான நைனப்பன், பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ரமேஷ் மீது வழக்குத் தொடர்ந்தார்.  
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அசோக் பிரசாத், காசோலை மோசடி வழக்கில் ஈடுபட்ட ரமேஷ் 2 மாத சிறைத் தண்டனையும், ரூ. 3 லட்சம் இழப்பீட்டுத் தொகையும், தொகை வழங்க தவறும்பட்சத்தில் மேலும் ஒரு மாதம்  சிறைத் தண்டனை அனுபவிக்குமாறு கடந்த 15.11.2018-இல் உத்தரவிட்டார். 
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, பெரம்பலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ரமேஷ் மேல்முறையீடு செய்தார். 
இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி லிங்கேஸ்வரன், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தார். மேலும், ரமேஷிடமிருந்து ரூ. 3 லட்சம் இழப்பீட்டுத் தொகையை வசூலித்து நைனப்பனுக்கு வழங்கவும், ரமேஷ் மீது போலீஸார் பிடி வாரண்ட் வழங்குமாறு குற்றவியல் நீதிபதிக்கு, மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com