மாசடைந்த ஏரியைத் தூர்வாரும் சமூக நலக் கூட்டமைப்பினர்

பெரம்பலூர் நகரில் சுமார் 150 ஏக்கரில் அமைந்துள்ள வெள்ளந்தாங்கி அம்மன் ஏரியை சமூக நல

பெரம்பலூர் நகரில் சுமார் 150 ஏக்கரில் அமைந்துள்ள வெள்ளந்தாங்கி அம்மன் ஏரியை சமூக நல கூட்டமைப்பைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் தூர்வாரி செப்பனிடும் பணி புதன்கிழமை தொடங்கியது.
பெரம்பலூர் நகரில் அமைந்துள்ள இந்த ஏரியின் தண்ணீரைக் கொண்டு விளாமுத்தூர் சாலை பகுதி மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகப் பகுதிகளைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்றன. 
இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஏரியை முறையாகப் பராமரிக்காததால் செடி, கொடிகளும், சீமைக் கருவேல மரங்களும் அடர்ந்து வளர்ந்து, ஏரியின் கரைகள் சேதமடைந்து தூர்ந்து போய் உள்ளது. மேலும், இந்த ஏரியில் பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட சாக்கடைகளின் கழிவு நீரும் கலப்பதால் ஏரி மாசடைந்து காணப்படுகிறது. 
இந்நிலையில், பெரம்பலூர் நகரில் கடும் வறட்சி நிலவுவதை அறிந்த சமூக ஆர்வலர்கள், இந்த ஏரியை தூர்வாரி செப்பனிடுவதன் மூலம் பெரம்பலூர் நகரில் நிலத்தடி நீர் வளத்தை உயர்த்த முடியும் எனக் கருதினர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஆனால், தூர்வாரும் நடவடிக்கை தொடங்க காலதாமதமாகும் என மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது. 
இதையடுத்து காத்திருக்க விரும்பாத சமூக நல கூட்டமைப்பினர், ஏரியைத் தூர்வாரும் பணியை புதன்கிழமை தொடங்கினர். பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்கள் நிதி உதவியுடன் முதல்கட்டமாக 6 பொக்லின் இயந்திரங்களைக் கொண்டு சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி துரிதமாக நடைபெறுகிறது. பின்னர், ஏரியில் வண்டல் மண்ணை அகற்றி ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தி, நீர் சேமிப்பு கொள்ளளவை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com