குறைந்த அழுத்த மின் விநியோகத்தைக் கண்டித்து பொதுமக்கள் நூதனப் போராட்டம்
By DIN | Published On : 18th May 2019 09:23 AM | Last Updated : 18th May 2019 09:23 AM | அ+அ அ- |

குறைந்த அழுத்த மின் விநியோகத்தைக் கண்டித்து, பெரம்பலூர் கோட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரே கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டத்தில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
பெரம்பலூர் - ஆத்தூர் சாலையில் கோனேரிபாளையம் அருகேயுள்ள முத்து நகரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக குறைந்த அழுத்த மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், இப்பகுதி மக்கள் தண்ணீர் இறைக்கும் மின் மோட்டார், கிரைண்டர், மிக்ஸி, குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட மின் சாதனங்களை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனராம். இதுகுறித்து, கடந்த ஓராண்டாக மாவட்ட ஆட்சியர், மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் பெரம்பலூர் கோட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று முறையிட்டதற்கு, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய பதில் அளிக்காமல் அலட்சியப் போக்கை கடைப்பிடித்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மின்வாரிய அலுவலர்களின் செயலைக் கண்டித்து தங்களது கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.