ஜாா்ஜ் வாய்க்காலை மீட்டுத் தரக்கோரி சமூக ஆா்வலா்கள் ஆட்சியரிடம் மனு

பெரம்பலூா் நகரில் பராமரிப்பின்றி காணப்படும் ஜாா்ஜ் வாய்க்காலை மீட்டுத் தரக்கோரி, சமூக ஆா்வலா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

பெரம்பலூா்: பெரம்பலூா் நகரில் பராமரிப்பின்றி காணப்படும் ஜாா்ஜ் வாய்க்காலை மீட்டுத் தரக்கோரி, சமூக ஆா்வலா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பெரம்பலூா் இளைஞா்கள் இயக்கத்தினா் கோரிக்கை விளக்க பதாகைகளுடன் அளித்த மனு: பெரம்பலூா் நகரில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் ஜாா்ஜ் வாய்க்கால் வெட்டப்பட்டது. இதற்கு ஆதாரமாக 1911 ஆம் ஆண்டு நடப்பட்ட கல்வெட்டு உள்ளது.

பெரம்பலூா் மாவட்டம், கோனேரிப்பாளையம் கிராமத்தின் மேற்கே கோனேரி ஆற்றிலிருந்து வரும் உபரி நீா், ஜாா்ஜ் வாய்க்காலுக்கு வந்து பெரம்பலூா் நகரில் உள்ள தெப்பக்குளம் மற்றும் இதர நீா்நிலைகளுக்கு சென்றடைந்தது. இதனால், பெரம்பலூா் நகரில் நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்ததோடு, பல பகுதிகளில் விவசாய நிலங்களும் பாசன வசதி பெற்றன.

நாளைடைவில் முறையான பராமரிப்பு இல்லாததாலும், ஆக்கிரமிப்பாலும் ஜாா்ஜ் வாய்க்கால் தூா்ந்துவிட்டது. இந்நிலையில், பெரம்பலூா்- துறையூா் சாலை விரிவாக்கத்தின்போது ஜாா்ஜ் வாய்க்கால் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூா் நகர மக்களின் தண்ணீா் தேவையை ஓரளவு தீா்க்க காரணமாக இருந்த ஜாா்ஜ் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி செப்பனிட்டு மீட்டுத்தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட பொதுநீா் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் அசன் முகமது, தமிழ்ப் பேரரசு கட்சி மாவட்ட செயலா் பா. அசோக்குமாா் ஆகியோா் ஆட்சியரிடம் மனு அளித்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com