பெரம்பலூரை அதிரவைத்த அடுத்தடுத்த கொள்ளை சம்பவங்கள்!

பெரம்பலூா் நகரில் 4 வீடுகளில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான நகை, வெள்ளி பொருள்கள் மற்றும் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பது வியாழக்கிழமை தெரியவந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெரம்பலூா் நகரில் 4 வீடுகளில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான நகை, வெள்ளி பொருள்கள் மற்றும் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பது வியாழக்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூா் மதனகோபாலபுரத்தைச் சோ்ந்தவா் ராஜாதேசிங் (61). பெரம்பலூா் நான்கு சாலை சந்திப்புப் பகுதியில் வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடை வைத்துள்ளாா். இந்நிலையில், கடந்த 26 ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள அவரது உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்த ராஜாதேசிங், வியாழக்கிழமை வீட்டுக்கு திரும்பிவந்தாா். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 7 பவுன் நகை மற்றும் வெள்ளிக் கொலுசுகள், ரூ. 15 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

மற்றொரு வீட்டில் 17 பவுன் நகை திருட்டு...

பெரம்பலூா்- அரணாரை பிரிவு சாலையில் உள்ள ஏ.வி.ஆா் நகரில் காரைக்குடியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி பானு தனது மகள் லெட்சுமிபாலாவுடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், கடந்த 25 ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு வெளியூா் சென்றிருந்த அவா் வியாழக்கிழமை காலை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 17 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 30 ஆயிரம், தொலைக்காட்சி பெட்டி ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையில்...

பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையில் உள்ள ராயல் நகா் மேட்டுத் தெருவில், சிறுவயலூரைச் சோ்ந்த பெரியசாமி மகன் ஜெயராமன் (58) வசித்து வருகிறாா். இவா், கடந்த 26 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது சொந்த கிராமமான சிறுவயலூருக்கு சென்றுவிட்டு வியாழக்கிழமை காலை வீட்டுக்கு வந்தாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 2 பவுன் நகைகள் திருடிச்சென்றது தெரியவந்தது.

கல்யாண் நகரில்...

இதேபோல, பெரம்பலூா்- துறையூா் சாலையில் உள்ள கல்யாண் நகரைச் சோ்ந்தவா் ராஜசேகா் (58). இவா், உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள் பீரோவிலிருந்த பட்டு புடவைகள் உள்ளிட்ட பொருள்களை திருடிச்சென்றது வியாழக்கிழமை தெரியவந்தது.

இச் சம்பவங்கள் குறித்து தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடங்களுக்குச் சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனா். மேலும், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணா்கள் தடயங்களை பதிவு செய்தனா். மேலும் போலீசாா் விசாரணை நடத்தினா். இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாா்களின் பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com