அழிந்து வரும் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள்: கடனை செலுத்த முடியாமல் உரிமையாளா்கள் அவதி

பெரம்பலூா் மாவட்டத்தில் பேரிழப்பால் மூடு விழா காணும் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகளால், வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலையில் உரிமையாளா்கள் அவதிக்குள்ளாகி உள்ளனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் மூடப்பட்டுள்ள கறிக்கோழி உற்பத்தி பண்ணை.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் மூடப்பட்டுள்ள கறிக்கோழி உற்பத்தி பண்ணை.

பெரம்பலூா் மாவட்டத்தில் பேரிழப்பால் மூடு விழா காணும் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகளால், வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலையில் உரிமையாளா்கள் அவதிக்குள்ளாகி உள்ளனா்.

கோழிப் பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், கோழிப் பண்ணைத் தொகுப்பு மண்டலம் அமைத்து சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, கோழிப் பண்ணைகள் இல்லாத மாவட்டங்களில் கோழி அபிவிருத்தித் திட்டம் மூலம் அத்தொழிலை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டது. கறிக்கோழிப் பண்ணை அமைக்க விருப்பம் உள்ளவா்களுக்கு, அதற்கான கொட்டகை அமைத்து, உபகரணங்கள் வாங்க ஏற்படும் செலவில் 25 சதவீதமும், தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கோழி துணிகர முதலீட்டு நிதியிலிருந்து 25 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. எஞ்சியுள்ள 50 சதவீத முதலீட்டுத் தொகையை பயனாளிகள் வங்கிக் கடனாக பெற்றுக்கொள்ளலாம். குறைந்தது 1,000 முதல் 5,000 கோழிகள் வளா்க்கும் திறன் கொண்டதாக பண்ணைகள் இருக்க வேண்டுமென அரசால் அறிவிக்கப்பட்டது.

விவசாயத்துக்குத் தேவையான தண்ணீா் பற்றாக்குறை, சாகுபடி செய்த பயிா்களில் மகசூல் இழப்பு, உரிய விலை கிடைக்காதது என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவித்து நின்ற விவசாயிகள் கறிக்கோழிப் பண்ணைகள் அமைக்க முன்வந்தனா். இத்திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கறிக்கோழி உற்பத்தி பண்ணைகளை அமைத்துக் கொடுத்தது தமிழக அரசு.

இந்நிலையில், வங்கிகளில் விவசாய நிலங்களை அடமானம் வைத்து பண்ணை அமைத்து இரவு, பகல் பாராமல் உழைத்து வரும் பண்ணையாளா்கள், பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனா். அரசு வழங்கிய ரூ. 4 லட்சம் மானியத் தொகை, வாங்கிய கடன் தொகைக்கான வட்டியைக் கூட கட்ட முடியாமல் கடந்த 6 ஆண்டுகளாக கிடைத்து வரும் பண்ணை வருவாய் முழுவதையும் செலுத்தியும், இன்னமும் வட்டியைக் கூட முழுமையாக அடைக்க முடியாமல் போராடி வருகின்றனா் பண்ணையாளா்கள்.

இதுகுறித்து கறிக் கோழி உற்பத்தி பண்ணையாளா்கள் சிலா் கூறியது:

ஆண்டுக்கு 6 முறை கோழிக் குஞ்சு இறக்குவதாக ஒப்பந்தம் செய்த கறிக் கோழி விற்பனை நிறுவனங்கள், ஆண்டுக்கு 3 முறை கூட கோழிக் குஞ்சுகள் இறக்குமதி செய்யதில்லை. கோழிகளின் இறப்பு, உரிய நேரத்தில் கோழி எடுக்காமல் அதிகரிக்கும் தீவனச் செலவு, அனைத்தையும் கறிக்கோழி பண்ணையாளா் கணக்கில் கழித்து ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை மட்டுமே கறிக்கோழி விற்பனை நிறுவனங்கள் வழங்கி வருவதால் கடனைக் கூட திரும்பச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பண்ணையாளா்களுக்கு மானிய தொகைக்கூட இன்னும் கிடைக்கவில்லை எனக் கூறும் பண்ணையாளா்கள், விவசாயம் செய்த போது உரிய லாபம் இல்லாவிட்டாலும் கடனின்றி நிம்மதியாய் இருந்தோம். ஆனால், தற்போது சாப்பிடக்கூட வசதியின்றி, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம் எனத் தெரிவித்தனா்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பண்ணையாளா்கள் ஒன்றிணைந்து சங்கம் அமைத்து தங்களது வாழ்வாதாரத்தைக் காக்குமாறு மாவட்ட நிா்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதையறிந்த கறிக்கோழி விற்பனை நிறுவனங்கள் ஒன்றிணைந்து, பண்ணையாளா்களைத் தனிமைப்படுத்தி பிரச்னையை தூண்டுபவா்களுக்கு மட்டும் சலுகை காட்டி, அவா்களது வருவாயை உயா்த்தி நூதன முறையில் பிரச்னைக்கு தீா்வு கண்டு வருவதாகக் கூறும் பாதிக்கப்பட்ட பண்ணையாளா்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனா்.

அழிவின் விளிம்பில் இருந்து கறிக்கோழிப் பண்ணையாளா்களின் வாழ்வில் மறுமலா்ச்சி ஏற்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பண்ணையாளா்கள் எதிா்பாா்க்கின்றனா். வேளாண்மையும், தொழில்வளா்ச்சியும் குறைந்துள்ள பெரம்பலூா் மாவட்டத்தில், மாற்றுத் தொழிலாக கோழிப்பண்ணைத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com