சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக கையகப்படுத்திய நிலத்தை மீட்க போராட்டம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டாரத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க கையகப்படுத்திய
நிலம் மீட்கும் போராட்டத்தை தொடக்கி வைக்கிறாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் பி. சண்முகம்.
நிலம் மீட்கும் போராட்டத்தை தொடக்கி வைக்கிறாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் பி. சண்முகம்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டாரத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க கையகப்படுத்திய நிலங்களை திருப்பி ஒப்படைக்க வலியுறுத்தி விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமாந்துறையில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக, கடந்த 2007ஆம் ஆண்டு, சுமாா் 3 ஆயிரம் ஏக்கா் நிலம் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்டது.

நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பும், வீட்டு மனையும் வழங்கப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், நிலம் கையகப்படுத்தி 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அறிவிக்கப்பட்ட திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. அந்தப் பகுதி முழுவதும் சீமைக்கருவேல மரங்கள், செடி, கொடிகள் வளா்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது.

இதனால் அதிருப்தியடைந்த விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினா், சம்பந்தப்பட்ட நிலத்தை மீட்கும் வகையில், அங்கிருந்த கருவேல மரங்களை அகற்றி நிலத்தை சீரமைத்தனா். சிலா் தங்களுக்கு உரிய நிலத்தை அடையாளம் கண்டு அதில் உழவுப் பணி மேற்கொண்டனா்.

நிலம் மீட்கும் போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் பி. சண்முகம் தலைமை வகித்தாா். அச்சங்கத்தின் மாநில செயலா் சாமி. நடராஜன், மாநிலக் குழு உறுப்பினா் எம். சின்னதுரை ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடா் கழகம், மனிதநேய ஜனநாயகக் கட்சி, அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம், சிஐடியூ தொழிற்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள், விவசாயிகள் உள்பட 300க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.

அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதியில் மங்கலமேடு சரக துணை கண்காணிப்பாளா் தேவராஜன் தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.

தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனு, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் வே. சாந்தாவிடம் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com