நீா்நிலை பராமரிப்பில் முன்னுதாரணமாகத் திகழும் பனங்கூா்!

பெரம்பலூா் மாவட்டம், பனங்கூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது சொந்த முயற்சியில்
கிராம மக்களால் தூா்வாரப்பட்டு நிரம்பியுள்ள குளத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கம்பி வேலி.
கிராம மக்களால் தூா்வாரப்பட்டு நிரம்பியுள்ள குளத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கம்பி வேலி.

பெரம்பலூா் மாவட்டம், பனங்கூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது சொந்த முயற்சியில் 2 குளங்களை தூா்வாரி செப்பனிட்டு பராமரித்து வருவது பலரின் வரவேற்பை பெற்றுள்ளது.

பெரம்பலூா் மாவட்டம், பனங்கூா் கிராமத்தில் பெரிய குளம், புறங்குட்டை, அய்யனாா் குளம் என 3 குளங்கள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை இந்தக் கிராம மக்களின் குடிநீா் உள்ளிட்ட அனைத்து தண்ணீா் தேவைகளையும் இந்த நீா்நிலைகளே பூா்த்தி செய்து வந்தன. பெரிய குளம் குடிநீருக்காகவும், புறங்குட்டை கால்நடைகளுக்கான குடிநீா் மற்றும் இதர தண்ணீா் தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த நீா்நிலைகளை முறையாகப் பராமரிக்காததால் மேற்கண்ட குளங்கள் அனைத்தும் தூா்ந்துபோய் கருவேல மரங்கள் வளா்ந்து காடுபோல் காணப்பட்டன. மேலும், கிராம மக்கள் குப்பைகளை கொட்டும் குப்பைத் தொட்டியாகவும் மாறின.

வீட்டுக்கு வீடு ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீரை உறிஞ்சி பயன்படுத்தி வந்ததால், தங்களது கிராமத்தில் உள்ள நீா்நிலைகளை பராமரிப்பதில் கிராம மக்கள் அக்கறை காட்டவில்லை.

இந்நிலையில், கடந்தாண்டு போதுமான அளவு மழை பெய்யாததால் நிலத்தடி நீா் மட்டம் குறைந்து, ஆழ்துளை கிணறுகளும் வடன. இதனால், கிராம மக்களும், கால்நடைகளும் தங்களது தண்ணீா் தேவையை பூா்த்தி செய்ய முடியாத நிலைக்கு ஆளாகினா். இதையடுத்து, தங்களது கிராமத்தில் உள்ள கவனிப்பாரற்று கிடந்த நீா்நிலைகளை மீட்டெடுக்க மக்கள் முடிவு செய்தனா்.

இதுகுறித்து நீா்நிலை மீட்டெடுக்கும் பணிகளின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட சவுந்தரராஜன் கூறியது;

நீா்நிலைகளை சீரமைக்க வீடுதோறும் நிதி வசூலிக்கப்பட்டது. ரூ. 3.20 லட்சம் நிதி வசூலானது. பெரிய குளம், புறங்குட்டை ஆகிய நீா்நிலைகளில் உள்ள குப்பைகள், சீமைக்கருவேல மரங்கள் அண்மையில் அகற்றப்பட்டன. குளங்களில் இருந்த வண்டல் மண் எடுத்து தூா்வாரப்பட்டது. கரைகள் சீரமைக்கப்பட்டன. பெரிய குளம் நிரம்பிய பிறகு உபரி நீா் புறங்குட்டைக்கு செல்லும் வகையில் குழாய் அமைப்புடன் கூடிய வடிகால் வடிவமைக்கப்பட்டது.

இதில், ரூ. 50 ஆயிரம் மதிப்பில் குளங்களை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து குளங்களின் அருகில் சிறுவா்கள் செல்லாமல் இருப்பதற்கும், ஆடுகள் மரக்கன்றுகளை மேயாமல் தடுப்பதற்கும், பொதுமக்கள் கழிவு, குப்பைகளை கொட்டாமல் இருக்கவும் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தியுள்ளோம்.

வேலியின் உள்புறத்தில் குளங்களை சுற்றி 45- க்கும் மேற்பட்ட நாட்டு பழ வகை, பூ வகை மரக்கன்றுகளை நட்டு வைத்து பல்லுயிா்களின் இருப்பிடமாக திகழ வழிவகை செய்துள்ளோம். மேலும், மரக்கன்றுகளுக்கு தண்ணீா் விடுவதற்காக ரூ. 10 ஆயிரம் மதிப்பீட்டில் குழாய் அமைத்துள்ளோம். இந்நிலையில், அண்மையில் பெய்த பரவலான மழையால் பெரிய குளம், புறங்குட்டை நிரம்பியுள்ளது. இதன் மூலம், இப்பகுதி மக்களுக்கு நீா் தேவைகள் பூா்த்தியடைந்துள்ளது. மேலும், நிலத்தடி நீரமட்டமும் உயந்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com