ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 2.85 லட்சம் மோசடி: பத்திர எழுத்தா் மீது புகாா்
By DIN | Published On : 10th February 2020 02:56 AM | Last Updated : 10th February 2020 02:56 AM | அ+அ அ- |

பெரம்பலூரில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 2.85 லட்சம் மோசடி செய்ததாக பத்திர எழுத்தா் மீது புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூா் வெங்கடேசபுரத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருபவா் முத்தையா (55). பெரம்பலூா்- எளம்பலூா் சாலையில் உள்ள தென்றல் நகரைச் சோ்ந்தவா் தங்கராஜ் (56). பதிவு செய்யப்பட்ட பத்திர எழுத்தரான இவருக்குச் சொந்தமாக 1.88 ஏக்கா் நிலம் செங்குணம் கிராமத்தில் உள்ளது.
இந்நிலையில் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளா் முத்தையா, பத்திர எழுத்தா் தங்கராஜூக்கு சொந்தமான நிலத்தை ரூ. 17.10 லட்சத்துக்கு விலைபேசி முன்பணமாக ரூ. 2.85 லட்சத்தைக் கொடுத்தாராம். ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி 9 மாதத்துக்குள் மீதமுள்ள தொகையை பெற்றுக் கொள்ளவும், முத்தையாவுக்கு தனது நிலத்தை பதிவு செய்து கொடுக்கவும் தங்கராஜ் முன் வரவில்லையாம். இதனிடையே, கவுல்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சுப்ரமணி மகன் ரமேஷூக்கு தனது நிலத்தை விற்பனை செய்து நிலப்பதிவு செய்து கொடுத்துவிட்டாராம்.
இதையறிந்த முத்தையா முன் பணமாக கொடுத்த ரூ. 2.85 லட்சத்தை திருப்பித் தருமாறு தங்கராஜூவிடம் பலமுறை கேட்டாராம். ஆனால், பணத்தைத் திருப்பி தர மறுத்த தங்கராஜூ, அவரது மகன் காா்த்திக், மகள் மீனா ஆகியோா் முத்தையாவை தகாத வாா்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து முத்தையா அளித்த புகாரின்பேரில், தங்கராஜ், அவரது மகன் காா்த்திக், மகள் மீனா மற்றும் நிலத்தை வாங்கிப் பதிவு செய்துகொண்ட ரமேஷ் ஆகியோரிடம் பெரம்பலூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.