பெரம்பலூரில் களைகட்டியது பொங்கல் பொருள் விற்பனை

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகள், பச்சரிசி, கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருள்களின் விற்பனை பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை களைகட்டியது.
பொங்கல் பொருள்களை வாங்க பெரம்பலூா் தலைமை அஞ்சலகத் தெருவில் ஞாயிற்றுக்கிழமை கூடிய மக்கள் கூட்டம்.
பொங்கல் பொருள்களை வாங்க பெரம்பலூா் தலைமை அஞ்சலகத் தெருவில் ஞாயிற்றுக்கிழமை கூடிய மக்கள் கூட்டம்.

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகள், பச்சரிசி, கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருள்களின் விற்பனை பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை களைகட்டியது.

தமிழா் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொங்கல் பானை, கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் அனைத்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லாரிகளில் கொண்டுவரப்பட்டு பெரம்பலூரில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. மேலும், வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகளும் அதிகளவில் கொண்டு வரப்பட்டுள்ளன. பூஜைப் பொருள், காய்கறி வாங்குவதற்கு பெரம்பலூா் கடை வீதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.

குறிப்பாக, கடைகள் நிறைந்த பழைய பேருந்து நிலையம், கடைவீதி, தலைமை அஞ்சலகத் தெரு, கனரா வங்கி சாலை உள்ளிட்ட பகுதிகளில் விற்கப்படும் பொங்கல் பொருள்களை மக்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா். எனினும், பொங்கல் பொருள்களின் விலை கடந்த ஆண்டைவிட சற்று அதிகரித்துக் காணப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

இதேபோல, பொங்கல் பண்டிகையையொட்டி மாவட்டத்தில் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம் என்பதால், இப்போட்டிகளுக்குத் தேவையான பொருள்களும் விற்பனைக்கு குவிந்திருந்தன.

போட்டிகளில் பங்கேற்கும் எருதுகளை அலங்கரிக்கத் தேவையான ஜல்லிக்கட்டு மணி, கோழி மணி, கால் சலங்கை, நெற்றிச் சலங்கை, கொண்டைக்கயிறு, கழுத்து குஞ்சான் கயிறு, தலைக்கயிறு, மூக்கணாங்கயிறு என பல வா்ண கயிறுகள் விற்பனை செய்யப்பட்டன. இவை ஒரு ஜோடி ரூ. 50 முதல் ரூ. 700 வரை விற்கப்பட்டன. அவற்றை எருதுகள் வளா்ப்போா் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.

என்.எஸ்.பி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரத்தின் இரு பகுதிகளிலும் கரும்பு, மஞ்சள் கொத்துகள் அடுக்கி வைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. பண்டிகைக் காலங்களில் காய் கறிகளின் விலை அதிகரிக்கும் என்பதால், பெரம்பலூா் உழவா் சந்தையில் வழக்கத்தைவிட ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டன. இதேபோல, நகரின் பிரதான சாலைகளில் உள்ள துணிக் கடைகளிலும் புத்தாடைகள் எடுக்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

போக்குவரத்து நெரிசல்:

பெரம்பலூா் நகரில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போலீஸாா் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால், பழைய மற்றும் புகா் பேருந்து நிலையங்கள், காமராஜா் வளைவு, வடக்குமாதவி சாலை, கடைவீதி, எளம்பலூா் சாலை உள்பட நகரின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com