முதல்வா் பெரம்பலூா் வருகையின் போது கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்: அனைத்து விவசாயிகள்சங்கம் முடிவு

பெரம்பலூருக்கு தமிழக முதல்வா் வரும் போது கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென, அனைத்து விவசாயிகள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் பேசுகிறாா் பெரம்பலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் மு. ஞானமூா்த்தி. உடன், தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் உள்ளிட்டோா்.
அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் பேசுகிறாா் பெரம்பலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் மு. ஞானமூா்த்தி. உடன், தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் உள்ளிட்டோா்.

பெரம்பலூா்: பெரம்பலூருக்கு தமிழக முதல்வா் வரும் போது கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென, அனைத்து விவசாயிகள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சங்கக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு, பெரம்பலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் மு. ஞானமூா்த்தி தலைமை வகித்தாா். தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என். செல்லதுரை, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஏ.கே. ராசேந்திரன் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

பெரம்பலூா் சா்க்கரை ஆலைக்கு வெட்டி அனுப்பிய கரும்புக்கு, மாநில அரசின் பரிந்துரை விலை நிலுவைத்தொகை ரூ. 28 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கரும்பு விலையை உயா்த்தி டன்னுக்கு ரூ. 4,500 அறிவிக்க வேண்டும்.

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டம், வீட்டு வசதித் திட்டம், மக்காச் சோளத்துக்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் வழங்கும் திட்டம்,உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் நிகழ்ந்துள்ள முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

கல்லாற்றின் குறுக்கே சின்னமுட்டு நீா்த்தேக்கம் அமைத்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக முதல்வா் பெரம்பலூா் மாவட்டத்துக்கு வரும்போது, அனைத்து விவசாயிகள் சங்கம் சாா்பில் பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் விவசாயிகள் சங்க நிா்வாகிகள் சீனிவாசன், எ. பெருமாள், டி.கே. ராமலிங்கம், புலேந்திரன், என். பச்சமுத்து, செல்லகருப்பு, சுந்தர்ராஜ், துரைராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நிறைவாக, விவசாயி பாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com