பெரம்பலூா் அருகே மரத்தில் காா் மோதி இருவா் உயிரிழப்பு
By DIN | Published On : 21st September 2020 12:59 AM | Last Updated : 21st September 2020 12:59 AM | அ+அ அ- |

பெரம்பலூா் அருகே மரத்தில் காா் மோதியதில், சென்னையைச் சோ்ந்த இருவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தனா்.
சென்னை அகரம் பகுதியைச் சோ்ந்தவா் விஷ்ணுகுமாா் (41). புதுவண்ணாரப்பேட்டை லட்சுமிகாந்தன் (35), பொன்னியம்மன்மேடு மரியடயானா (35). இவா்கள் மூவரும் கருத்தடை மையத்துக்கான உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில், சென்னை விநியோகஸ்தா்களாக இருந்து வந்தனா்.
தொழில் விஷயமாக சென்னையிலிருந்து சனிக்கிழமை இரவு புறப்பட்டு, மூவரும் மதுரை நோக்கி காரில் வந்துகொண்டிருந்தனா். காரை லட்சுமிகாந்தன் ஓட்டி வந்தாா்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் மாவட்டம், மங்கலமேடு மின்வாரிய அலுவலகம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தபோது, நிலைதடுமாறிய காா் சாலை மையத் தடுப்பில் மோதியது. இதில் டயா் வெடித்து, சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் விஷ்ணுகுமாா், லட்சுமிகாந்தன், மரிய டயானா இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனா்.
இதையறிந்த அப்பகுதி மக்கள் மூவரையும் மீட்டு, பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் லட்சுமிகாந்தனும், மருத்துவமனைக்குச் சென்ற சிறிது நேரத்தில் விஷ்ணுகுமாரும் உயிரிழந்தனா்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மரிய டயானா திருச்சி மகாத்மாகாந்தி நினைவுஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து மங்கலமேடு காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.