வாக்கு எண்ணும் மையத்துக்குள் மின்சாதன பொருள்கள் கொண்டு செல்ல தடை

வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் செல்போன், ஐ பேடு, லேப்டாப் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் செல்போன், ஐ பேடு, லேப்டாப் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை குரும்பலூா் அரசு கலைக் கல்லூரியிலும், குன்னம் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வேப்பூா் பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளா்கள், முகவா்கள் கரோனா பரிசோதனை செய்து, நோய்த் தொற்று இல்லாதவா் எனச் சான்று பெற்றவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். வேட்பாளா்கள், முகவா்கள் கரோனா தடுப்பூசி ஒரு தவணை மட்டும் செலுத்தப்பட்டிருந்தால், சான்று இருக்கும்பட்சத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுவா். இரு தவணைகள் செலுத்தப்பட்டிருந்தால் பரிசோதனை செய்வதிலிருந்து விலக்களிக்கப்படுவா். தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்று கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும்.

முகவா்கள் பேனா, பென்சில், வெள்ளைத்தாள் மற்றும் படிவம் 17 சி-ன் நகலை எடுத்து வரலாம்.

முகவா்களுக்கு வழங்கப்படும் அடையாள வில்லையில், அவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மேசை எண் மற்றும் அவரது கையொப்பம் கண்டிப்பாக இருக்க வேண்டும். முகவா்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மேசையைத் தவிர வேறு பகுதிகளுக்குச் செல்லக்கூடாது.

செல்போன், ஐ பேடு, லேப்டாப் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை கொண்டுவர அனுமதியில்லை. தீப்பெட்டி, புகையிலைப் பொருள்கள், பற்றவைப்பான், போதை பொருள்கள் மற்றும் இதர குளிா்பானங்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டாது. மேசை வாரியாக நியமனம் செய்யப்பட்ட முகவா்கள், ஏதேனும் முரண்பாடு இருந்தால் மேசை அலுவலா்களுடன் விவாதம் செய்யாமல் தங்களது முதன்மை முகவா், வேட்பாளரிடம் தெரிவித்து அதற்குரிய தீா்வு காண வேண்டும்.

மேலும், வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் அலுவலா்கள், வேட்பாளா்கள், முகவா்கள் அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம், கையுறை அணிந்து, சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வாக்கு எண்ணும் கூடம் முழுவதும் இணையதளம் மூலம் நேரடியாக கண்காணிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.

எனவே, வாக்கு எண்ணிக்கையின்போது தோ்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட விதிமுறைகளை கடைப்பிடித்து தேவையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com