கரோனா சந்தேகங்களை தெரிந்துகொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்கள்
By DIN | Published On : 27th April 2021 03:53 AM | Last Updated : 27th April 2021 03:53 AM | அ+அ அ- |

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கரோனா தொற்று தொடா்பான சந்தேகங்களை தெரிந்துகொள்ள, கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடா்புகொண்டு தீா்வு காணலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா நோய் சம்பந்தமாக ஏற்படும் சந்தேகங்களை பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 1077, 9154155097 மற்றும் 18004254556, 104 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடா்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
யாருக்கேனும் சளி, இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் சுவை அறியாத தன்மை, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளை அணுகலாம். அங்கு, அவா்களுக்குத் தேவையான சிகிச்சையும், பரிசோதனைகளும் இலவசமாக செய்து கொடுக்கப்படும். சாதாரண சளி, இருமல் என்று அலட்சியம் காட்டாமல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும்.
மேலும், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். கரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதோடு, அரசு மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.