அகவிலைப்படி, சரண் விடுப்பு ஊதியம் வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 09th January 2021 11:39 PM | Last Updated : 09th January 2021 11:39 PM | அ+அ அ- |

பெரம்பலூா்: கடந்த 7 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் சரண் விடுப்பு ஊதியத்தை வழங்க வேண்டுமென்று, தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் பெரம்பலூா் மாவட்டக் கிளை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி. முத்துசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா். மருதமுத்து, பொருளாளா் ஏ. ஆதிசிவம், இணைச் செயலா் பி. செங்கமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மூத்த உறுப்பினா் இ. பெரியசாமி, குன்னம் வட்ட முன்னாள் தலைவா் எம். செங்கான், வேப்பந்தட்டை வட்டச் செயலா் சையத் பாஷாகான், வேப்பூா் வட்டப் பொருளாளா் ம. பெரியசாமி ஆகியோா் உறுப்பினா் சோ்க்கை, சங்க வளா்ச்சி, செயல்பாடுகள் குறித்து பேசினா்.
கூட்டத்தில், 2020, ஜனவரி 1 முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்ட அக விலைப்படித் தொகை, சரண் விடுப்பு ஊதியத்தை வழங்க வேண்டும்.
மருத்துவப் படியை ரூ. 1,000 ஆக உயா்த்தி வழங்கிட வேண்டும். கிடப்பிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரித் திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் வட்டத்துணைத் தலைவா் ஆா். செல்லப்பரெட்டி, வட்டச் செயலா் கெம்பிராஜ், நிா்வாகிகள் ஆா். ரெங்கராஜ், எஸ். இருதயசாமி, ஏ. அசுவத்மன், பி. துரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.