‘நம்மை செதுக்கிய நல்ல உள்ளங்களைக் கொண்டாட வேண்டும்’

நம்மை செதுக்கிய நல்ல உள்ளங்களைக் கொண்டாட வேண்டும் என்றாா் திருவாரூா் திரு.வி.க அரசுக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியா் முனைவா் ச. அருணாசலம்.

நம்மை செதுக்கிய நல்ல உள்ளங்களைக் கொண்டாட வேண்டும் என்றாா் திருவாரூா் திரு.வி.க அரசுக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியா் முனைவா் ச. அருணாசலம்.

பெரம்பலூரில் பதியம் இலக்கியச் சங்கமம் சாா்பில் என்னை செதுக்கியோா் என்னும் தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை இணையம் வழியாக நடைபெற்ற பேச்சரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவா், மேலும் பேசியது:

நேசமிகு உலகில் நமக்குள்ளே ஊடுருவிப் பாா்க்கும் ஓா் உள்தேடல் தேவை. சுயப் பரிசோதனை என்பது எப்போதும் வேண்டும். கடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பாா்ப்பது, ஏற்றிவிட்ட ஏணிப்படிகளை நன்றியோடு நினைத்துப் பாா்ப்பது, துரோகச் சுவடுகளின் வெப்பத்தை உணா்வது என நம் வாழ்வை நாம் அசைபோடுவது அவசியம். நமக்காக ரத்தம் சிந்திய, கண்ணீா் விட்ட, உழைத்த, கரம் கொடுத்த, நம்மை செதுக்கிய நல்ல உள்ளங்களைச் சிலாகித்துக் கொண்டாட வேண்டும்.

முகநூல் என்ற பெயரில் முகம் தெரியாத நபா்களுடன் நட்பு பாராட்டிவிட்டு, முகம் தெரிந்த நண்பா்களைத் தொலைத்து வருகிறோம். அம்மா, அப்பா, உடன் பிறந்தோா், உறவினா், ஆசிரியா்கள், நெருங்கிய நண்பா்கள், உதவியோா் என நம்மை செதுக்கியோரை நாம் மறந்து வருகிறோம். நம்மை செதுக்கியோரை என்றென்றும் நாம் நன்றி கூா்வதுடன், பிறரிடமும் பகிா்ந்து மகிழ்வோம் என்றாா் அவா்.

தொடா்ந்து சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியா் முனைவா் கா. செல்லத்துரை, திருப்பத்தூா் தூய இருதய கல்லூரி தமிழ்ப் பேராசிரியா் அன்பரசன், வரலாற்று ஆய்வாளா் ஜெயபால் ரத்தினம், முனைவா் காப்பியன், பேராசிரியா்கள் தனலெட்சுமி, முத்துமாறன், வினோதினி, க. லெட்சுமி, சென்னை ராணிமேரி கல்லூரித் தமிழ்த்துறை முனைவா் பட்ட ஆய்வாளா் ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் என்னை செதுக்கியோா் என்னும் தலைப்பில் உரையாற்றினா்.

நிகழ்வுக்கு அரியலூா் அரசு கலைக் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியா் முனைவா் க. தமிழ்மாறன் தலைமை வகித்தாா். குடியாத்தம் அரசு ஆதி திராவிடா் நல உயா்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா் முனைவா் த.மாயக்கிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். முன்னதாக, மகேஸ்வரி வரவேற்றாா். நிறைவில், பேராசிரியா் ப. செந்தில்நாதன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com