உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு
By DIN | Published On : 01st March 2021 12:24 AM | Last Updated : 01st March 2021 12:24 AM | அ+அ அ- |

சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அருகிலுள்ள காவல் நிலையங்களில் உடனே ஒப்படைக்க வேண்டுமென்று பெரம்பலூா் ஆட்சியா் ப.ஸ்ரீவெங்கட பிரியா உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து, தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் படைக்கலன்களை வைத்திருப்பதும், அவற்றை எடுத்துச் செல்லுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே, மாவட்டத்தில் உரிமம் பெற்றுள்ள அனைத்து துப்பாக்கி உரிமைதாரா்களும், தங்களது துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.
மேலும், தோ்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் அரசியல் கட்சியினா், காவல்துறையினா் அனுமதிக்கும் இடங்களில் அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே கூட்டங்களை நடத்தவும், வாகனங்களை பயன்படுத்தவும் வேண்டும்.